அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன்

வரிப்பத்தான்சேனை சலாமா இளைஞர் கழகம் நடாத்திய அம்பாறை மாவட்ட மின்னொளிக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பினாகத் தெரிவாகியது.

அணிக்கு 7பேர் 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள 64 முன்னணிக்கழகங்கள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி வரிப்பத்தான்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் முகாமையாளர் எஸ்.சனுான் தலைமையில் கடந்த (02 ம் திகதி) நடைபெற்றது.

இறுதிப்போட்டியானது இறக்காமம் அல்-றாசி விளையாட்டுக் கழகத்திற்கும், அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் நாணயச்சுழச்சியில் வெற்றி பெற்ற றாசி விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட நியு ஸ்டார் அணியினரை கேட்டுக்கொண்டதற்கமைவாக 5 ஓவர் நிறைவில் 3 விக்கட்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதில் சிபான் 17 பந்துகளுக்கு 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பதிலுக்கு வெற்றி பெறத்துடுப்பெடுத்தாடிய அல்-றாசி அணியினர் 5 ஓவர் நிறைவில் 3 விக்கட்களை இழந்து 46 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இச்சுற்றுப்போட்டியில் 55 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டனர். இதில் றஜா 23 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக் கொண்டார்.

இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக நியு ஸ்டார் அணியின் சிபானும், சிறந்த பந்து வீச்சாளராக நியு ஸ்டார் அணியின் சாக்கீரும், தொடரின் சிறந்த வீரராக சலாமா அணியின் முகம்மட் சாகீரும் தெரிவு செய்யப்பட்டு அதிதிகளினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனான நியு ஸ்டார் அணியின் தலைவரிடம் வெற்றிக்கிண்ணத்தினையும் 40 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாம் இடம்பெற்ற அல்-றாசி அணித்தலைவரிடம் கிண்ணத்துடன் 20 ஆயிரம் ரூபா காசோலையும் இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர் என்.எம்.ஆசீக் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் வீ.ரீ.சமூன், அக்கரைப்பற்று மக்கள் வங்கி முகாமையாளர் எம்.பீ.எம்.அன்வர், இறக்காமம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்.றசீன் உட்பட நன்கொடையாளர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்களின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டு பரிசில்களை இதன்போது வழங்கி வைத்தனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை