தோனியை தொடர்ந்து சுரேஷ் ரைனாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக தன்னுடைய உத்தியோகபூர்வ இன்ஸ்ராகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய அணியின் மற்றுமொரு அனுபவ வீரரான சுரேஷ் ரைனா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வுபெறுவது தொடர்பில் இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவுசெய்துள்ள இவர், “என் மீதான அன்பும் ஆதரவும் வைத்திருந்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். 1929 மணித்தியாலயத்தை கருத்திற்கொண்டு ஓய்வுபெறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி, ஐசிசியின் மிகப்பெரிய மூன்று கிண்ணங்களை இந்திய அணிக்கு தனது தலைமைத்துவத்தின் கீழ் வென்றுக்கொடுத்துள்ளார். இவர் 2007ம் ஆண்டு நடைபெற்ற ரி 20 உலகக் கிண்ணம், 2011ம் ஆண்டு உலகக் கிண்ணம் மற்றும் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணம் என்பவற்றுக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கியதுடன், அணி சம்பியன் கிண்ணத்தையும் வென்றிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக ஜொலித்த மகேந்திரசிங் தோனி, இறுதியாக 2019ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். இந்தப் போட்டியில் இவரின் ரன்-அவுட் ஆட்டமிழப்பானது இந்திய அணிக்கு தோல்வியை வழங்கியிருந்ததாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அதன் பின்னர், தோனி இந்திய அணிக்காக எந்தவொரு போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை. இந்திய இராணுவப்படையுடன் தனது ஓய்வு நேரங்களை கழித்திருந்த இவர், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ரி 20 உலகக் கிண்ணத்துடன், சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ரி 20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தன்னுடைய ஓய்வை திடீரென மகேந்திரசிங் தோனி அறிவித்துள்ளார். மகேந்திரசிங் தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தனது ஓய்வினை அறிவித்திருந்ததுடன், ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

தோனி இதுவரையில் இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், முறையே, 4876, 10773 மற்றும் 1617 ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம், பிரபல விக்கெட் காப்பாளராக பார்க்கப்பட்ட இவர், களத்தடுப்பில் சர்வதேச போட்டிகளை பொருத்தவரை 829 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ளார்.

தனது ஓய்வு அறிவிப்பில் வித்தியாசத்தை காண்பித்துள்ள மகேந்திரசிங் தோனி, தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மணிநேரங்களை கணித்து, 1929 மணித்தியாலத்துடன் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை சுவாரஷ்மான விடயமாக பார்க்கப்படுகிறது.

மகேந்திரசிங் தோனியின் பாணியில் தன்னுடைய ஓய்வையும், சுரேஷ் ரைனா இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனி மற்றும் ரைனா ஆகியோர் ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்முறை ஐ.பி.எல். தொடர் நடைபெறவுள்ளதுடன், குறித்த தொடருக்கான குறுகிய கால பயிற்சி ஒன்றிற்காக, இருவரும் சென்னை வருகைத்தந்துள்ளனர். இந்தநிலையில், இருவரும் அடுத்தடுத்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுரேஷ் ரைனா தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓய்வு பதிவில், “உங்களுடன் (தோனியுடன்) விளையாடும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உணருவேன். அதற்கு மத்தியில் நான் ஒன்றும் இல்லை. எனது உள்ளத்தின் முழு பெருமையுடன் உங்களின் (தோனியின்) பாதையை தொடர முடிவெடுத்துள்ளேன். இந்தியாவுக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் மறக்கமுடியாத இடதுகை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரைனா, இந்திய அணிக்கான மிக முக்கிய வெற்றிகளில் பங்கு வகித்தவர். எனினும், இவருக்கு ஏற்பட்டுவந்த உபாதைகள் காரணமாக தொடர்ந்தும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

சுரேஷ் ரைனா, இறுதியாக இந்திய அணிக்காக 2018ம் ஆண்டு விளையாடியிருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியிலேயே இவர் இறுதியாக விளையாடியிருந்தார். அதன் பின்னர், இந்திய அணியை எந்தவொரு போட்டியிலும் இவர் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

முழு துடுப்பாட்ட வீரராக இந்திய அணியில் விளையாடியிருந்த சுரேஷ் ரைனா, 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 ரி 20 போட்டிகளில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டிகளில் 768 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள், 36 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 5615 ஓட்டங்களையும், ரி 20 போட்டிகளில் 1190 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

சுரேஷ் ரைனா துடுப்பாட்ட வீரராக மாத்திரமின்றி, பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராகவும் இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 62 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை