இரணைமடுவில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கக் கோரி போராட்டம்

இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை  முன்வைத்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு நேற்று இரணைமடு  விவசாய சம்மேளனத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும்  முன்னெடுக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அங்கு அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும்  கையளிக்கப்பட்டது. இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றப்படுக்கையில்  மிக மோசமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் அதனை  கட்டுப்படுத்துமாறு கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், செருக்கன்  பகுதியில் அமைக்கப்படும் உப்பளத்தின் பணிகளை நிறுத்தி செய்கை நிலங்களை  பாதுகாத்து தருமாறும் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் கீழுள்ள கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளரும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான எம்.சிவமோகன், 

இரணைமடு குளத்தின் கீழுள்ள கனகராயன் ஆற்றுப்படுக்கையில் மிக மோசமான  முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. மணல் அகழ்வை தடுக்காதுவிடின்  இரணைமடு குளத்திற்கு பாரிய ஆபத்து காணப்படுகின்றது. அப்பகுதியில்  மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை தடுப்பதற்குரிய நடவடிக்ககை எடுக்குமாறு  கேட்டுக்கொள்கின்றோமென தெரிவித்தார். 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் தொட்டே குறித்த பகுதியில் மணல்  அகழ்வு ஆரம்பித்துவிட்டது. அக்காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்  சி.சிறிதரன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் இருந்தார். அப்போது  கட்டுப்படுத்த முடியாது போன மணல் அகழ்வை இப்போதுள்ள அரசாங்கம்  கட்டுப்படுத்தும் என நம்புகின்றீர்களா ? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம்  வினவியபோது, 

இக் காலப்பகுதியில் மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் பொலிசாரின் கவன குறைவும்,  அவர்களின் செயற்பாடுமே கட்டுப்படுத்த முடியாது போனமைக்கான காரணமாகும்.  தற்போதுள்ள அதிகாரிகள் மற்றும் அரச தலைவர்கள் இவ்விடயத்தில் அதிகம் அக்கறை  செலுத்துவதால் இக்காலகட்டத்தில் இதனை கட்டுப்படுத்த முடியுமென  நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி குறூப் நிருபர் 

Wed, 08/26/2020 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை