எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது சுபிட்சத்தை நோக்கிய பயணமே இலக்கு

நாட்டின் இறைமை, மக்களது பாதுகாப்பு சகல வழிகளிலும் உறுதிப்படுத்தப்படும்

புதிய பாராளுமன்ற ஆரம்ப தின கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி கோட்டாபய

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபிட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள் வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நேற்று (20) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து எளிமையாக நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலம்  போன்ற அம்சங்கள் நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதியை புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன மற்றும் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக ஆகியோர் வரவேற்றனர்.

பிரதான வாயிலில் பாடசாலை மாணவிகள் மங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார முறைமையின் கீழ் நடைபெற்ற தேர்தல் ஒன்றில் 2/3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையுடன் ஸ்திரமான ஆட்சியொன்றை அமைக்கும் வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இந்த மக்கள் ஆணையை வழங்கிய நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்குவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. நோய்த் தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது. இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை கிடைத்துள்ள மிகப் பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பதவிக்காலப் பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளப்படுத்துவதாகவும் தான் உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தான் முன்னணி பௌத்த பிக்குகளைக் கொண்ட ஆலோசனை சபை ஒன்றை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம், இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுவும் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை உறுதி செய்யப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தான் உறுதியளித்தவாறு பொதுவான மக்கள் வாழ்க்கைக்கு தடையாக உள்ள பாதாள உலக செயற்பாடுகள், போதைப்பொருள் பிரச்சினை போன்ற சமூக சீரழிவுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு இருப்பது மக்களின் நம்பிக்கை மேம்படுத்துவதற்கு காரணமாகியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

'நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாடு குறித்து பெருமையடைகிறேன். எனக்கு எனது நாடு பற்றிய ஒரு தொலைநோக்குள்ளது.

எமது நோக்கம் வினைத்திறன் மிக்க பிரஜை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்கப் பண்பாடான சமூகத்தைக் கொண்ட சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதாகும்' எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களுக்கு உறுதியளித்த சுபிட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக தன்னுடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் நட்புக் கரம் நீட்டி அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை