கொரோனா தொற்று உலகில் நீண்ட காலத்திற்கு நீடிக்கலாம்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் உலகில் நீண்ட காலம் நீடித்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் அந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

அமைப்பின் நெருக்கடி நேரக் குழு வைரஸ் பரவல் தொடர்பில் நடத்திய 4ஆவது மதிப்பீட்டுச் சந்திப்புக்குப் பின்னர் அது அவ்வாறு எச்சரித்துள்ளது. நூறு ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடியை இந்த வைரஸ் பரவல் ஏற்படுத்தியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் குறிப்பிட்டார்.

நோய்ப் பரவல் உலக அளவிலான நெருக்கடி என்று நிறுவனம் அறிவித்து 6 மாதங்கள் ஆன நிலையில், சுமார் 18 மில்லியன் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 681,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நிலைமை தொடர்ந்து அபாயக் கட்டத்திலேயே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.

இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்குவதில் சுமார் 150 மருந்து நிறுவனங்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை அது புலக்கத்திற்கு வருவது சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

வைரஸ் பற்றிய பின்னணி விபரங்களை அறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னமும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்று டெட்ரோஸ் அதனொம் தெரிவித்துள்ளார்.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை