பாடத்திட்டத்தை நவீனமயப்படுத்த அமைச்சரவை பத்திரம்

தற்காலத்திற்கு ஏற்ப பாடசாலை பாடத்திட்டத்தை நவீனமயப்படுத்தி, மேம்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படும் என, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பிரதான பாடசாலைகள் பலவற்றின் அதிபர்களுடன் நேற்று (20) அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், மாணவர்களின் பகுப்பாயும் அறிவு மற்றும் ஆராய்ந்தறிவதற்கு மாணவர்கள் கொண்டுள்ள திறன் போன்றன பிரதான இடத்தை வகிக்கின்றன. கல்வி என்பது ஒரு ஆய்வு. ஆனால் தற்போதைய கல்வி முறையில் மாணவர்களுக்கானவாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே, மாணவர்களின் ஆர்வம் வளரும் வகையில் கல்வியின் கட்டமைப்பை வடிவமைப்பது அவசியமாகும். இது அனைவரின் கருத்துகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அமைச்சு மட்டத்தில் இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், மாவட்ட மட்டத்தில் பாடத்திட்ட அபிவிருத்தி தொடர்பில் நாடளாவிய ரீதியில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்,  பழைய மாணவர் சங்கங்கள், சிவில் அமைப்புகள், மத அமைப்புகளின் யோசனைகள், பரிந்துரைகள் இதில் முக்கியமாகும். அவை அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்து, அவை தொடர்பில் எதிர்கால முடிவுகளை எடுப்போம் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போது கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்என தாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் தொடர்பில் கலந்துகொண்ட அதிபர்கள் கல்வி அமைச்சருக்கு  தெரிவித்தனர். வேலைவாய்ப்புகள் தொடர்பான முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் பாடத்திட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க அமைச்சர், அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கான பல பாடங்களுக்கு பாடப்புத்தகங்கள் இல்லாததால் எழுந்துள்ள சிக்கலான சூழ்நிலை மற்றும் இது தொடர்பான எதிர்கால தீர்வுகள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

தொழில் தெரிவுகள் பற்றிய நோக்கை கொண்டதாக பாடசாலைகளில் ஆலோசனை சேவைகளை எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக மேற்கொள்ளலாம்  என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் கற்பித்தல் தரத்தை உயர்த்துவது தொடர்பில், நாட்டின் முன்னணி பாடசாலைகளில் பெறக்கூடிய பங்களிப்புகள் தொடர்பிலும், கவனம் செலுத்தப்பட்டதோடு, அது தொடர்பில் தங்களது ஆதரவை வழங்குமாறு, கலந்துகொண்ட பாடசாலை அதிபர்களிடம்,அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின்செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கலந்து கொண்டதோடு,கொழும்புஆனந்த கல்லூரி, தேவி பாலிகா வித்தியாலயம், தேஸ்டன் கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயம், புனித போல் பாலிகா வித்தியாலயம், லும்பினிவித்தியாலயம், கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், பாணந்துரை சுமங்கல ஆண்கள் வித்தியாலயம், நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம், மினுவாங்கொடை நாலந்தா கல்லூரி, கண்டி தர்மராஜ கல்லூரி, காலி மஹிந்த வித்தியாலயம், பட்டேமுல்ல தேசிய பாடசாலை, கேகாலை பெண்கள் வித்தியாலயம், வென்னப்புவ புனித ஜோசப் வாஸ்வித்தியாலயம், இப்பாகமுவதேசிய பாடசாலை, மாத்தறை சுஜாதா பெண்கள் வித்தியாலயம், ஹங்வெல்ல ராஜசிங்க வித்தியாலயம், ஹொரணை தக்ஷிலா வித்தியாலயம், கேகாலை புனித ஜோசப் பாலிகா வித்தியாலயம் ஆகியவற்றின் பிரதிநிதித்துவப்படுத்தும் அப்பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.

Fri, 08/21/2020 - 10:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை