கிழக்கு மாகாணத்தில் அமைதியான தேர்தல்

மட்டக்களப்பில் ஆர்வமாக வாக்களித்த மக்கள் 

வெல்லாவளி தினகரன், வாச்சிக்குடா விசேட, பெரியபோரதீவு தினகரன், திருமலை மாவட்ட விசேட, ஒலுவில் விசேட நிருபர்கள் 

கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஆர்வமாக வாக்களித்திருந்ததுடன் தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் இடம்பெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் - 19 அச்சுறுத்தல் காணப்பட்ட போதும் மக்கள் சுகாதார நடமுறைகளை பின்பற்றி தேர்தலில் ஆர்வமாக வாக்களித்திருந்தாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்கள் அறிவித்துள்ளன. 

குறிப்பாக எதுவித பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத நிலையில் சிறு, சிறு சம்பங்களே மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் வாக்களிப்பு நிலையங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. 

அம்பாறை மாவட்டம் 

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 70 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,   மக்கள் நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளித்தனர். வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றது.

காலையில் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெற்ற போதிலும் பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்பட்டதாக, வாக்குச் சாவடிகளுக்கு தலைமை தாங்கிய சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

வேட்பாளர்களும் தத்தமது வாக்குச்சாவடிகளுக்கு நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளித்தனர். வாக்குச் சாவாடிகளது கண்காணிப்பில் பெப்ரல், கபே போன்ற அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

அம்பாறை தேர்தல் தொகுதியில் 01 இலட்சத்து 77 ஆயிரத்து 144 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90 ஆயிரத்து 405 பேரும், கல்முனை தேர்தல் தொகுதியில் 77 ஆயிரத்து 637 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 01 இலட்சத்து 68 ஆயிரத்து 793 பேருமாக, 05 இலட்சித்தி 13 ஆயிரத்தி 979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 

திருகோணமலை மாவட்டம் 

திருகோணமலை மாவட்டத்திலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்திருந்ததாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

இம் மாவட்டத்தில் மொத்தமாக 2 இலட்சத்து 88 ஆயிரத்து 868 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்தத்தில் 73.5 வீதமான வாக்குப் பதிவாகும். பாரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

சுமுகமாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றிருந்தன என்றார்.  

இதேவேளை கிண்ணியாப் பகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டம் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மக்கள் அமைதியான முறையிலும், சுமுகமாகவும் வாக்களித்திருந்தனர். 

பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றிருக்காத நிலையில் சிறிய சிறிய முறைப்பாடுகள் 105 பதிவாகியிருந்தன. இத் தேர்தலில் 3 இலட்சத்து 2 ஆயிரத்து 337 பேர் வாக்களித்திருந்தனர். அதேநேரம் 94 ஆயிரத்து 656 பேர் வாக்களிக்கவில்லை என்றார்.

Thu, 08/06/2020 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை