ஆப்கான் சிறையில் ஐ.எஸ் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு

ஆப்கான் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு இரவு ஆரம்பமான இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பொறுப்பேற்றுள்ளது.

நன்கர்ஹார் மாகாணத் தலைநகர் ஜலாலாபாத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். தற்கொலைதாரி சிறைச்சாலையின் வாயிலில் குண்டு நிரப்பிய வாகனத்தை வெடிக்கச் செய்த பின் இந்தத் தாக்குதல் அரம்பமாகியுள்ளது.

தாக்குதல்தாரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதுவரை மூன்று தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதாகவும் நேற்று மதியம் வரை மோதல்கள் நீடித்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் சிறைக் கைதிகள், பொதுமக்கள், சிறைக் காவலர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சிறையில் இருந்து பல கைதிகளும் தப்பிச் சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 100 கைதிகள் தப்பிக்க முயன்றதாகவும் பலரும் பிடிபட்டதாகவும் நன்கர்ஹார் பொலிஸ் பேச்சாளர் தாரிக் அசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சிறையில் சுமார் 1,500 கைதிகள் வரை இருப்பதோடு இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புபட்டவர்களாவர். எனினும் அப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி மூன்று நாள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு தாம் பொறுப்பில்லை என்று தலிபான்கள் குறிப்பிட்டனர்.

நன்கர்ஹாரில் அடிக்கடி தாக்குதல்கள் இடம்பெற்று வருவதோடு அவைகளில் பெரும்பாலானவற்றுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை