‘கொவிட்–19’ பற்றிய பொய் தகவல்களால் 800 பேர் பலி

கொவிட்–19 பற்றிய பொய்த்தகவல்களால் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 800 பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய பொய்த்தகவலின் விளைவாக சுமார் 5,800 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக வெப்பமண்டல மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அமெரிக்க சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

பலர் மெத்தனோல் அல்லது சாராயச் சத்துக் கொண்ட கிருமிநீக்கப் பொருள்களைக் குடித்து உயிரிழந்துள்ளனர். அவை வைரஸ் தொற்றைக் குணப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில் உட்கொள்ளப்பட்டன.

நோய்த் தொற்று பரவும் வேகத்துக்கு ஈடாக, அது பற்றிய பொய்யான தகவல்களும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக அளவில் பூண்டு சாப்பிடுவது அல்லது ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது போன்ற ஆலோசனைகளை உயிரிழந்த பலர் பின்பற்றினர். சிலர் கோமியம் போன்றவற்றையும் குடித்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

பொய்த்தகவலின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சர்வதேச அமைப்புகள், அரசாங்கங்கள், சமூக ஊடகத் தளங்கள் ஆகியவை பொறுப்பு வகிக்க வேண்டும் என்று ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டியது.

Fri, 08/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை