உலக கொரோனா தொற்று 18 மில்லியனைத் தொட்டது

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நேற்று 18 மில்லியனைத் தொட்டதாக உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கொள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்று தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை குறைந்தது 18,011,763 ஆக பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் புதிதாக ஒரு மில்லியன் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உலகின் பாதிக்கும் அதிகமான நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்திங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளன.

மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் 4,657,693 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு 154,793 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் 2,733,677 நோய்த் தொற்றுச் சம்பவங்களுடன் 94,104 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவதாக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இந்தியாவில் 1,750,723 பேர் கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதோடு 37,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி உலகெங்கும் பதிவான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 687,941 ஆக அதிகரித்துள்ளது.

அரசுகள் வெளியிடும் உத்தியோகபூர்வ தரவுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டபோதும் இதன் உண்மையான எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான நாடுகள் வைரஸ் தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்துவோரையும் மோசமான நிலையில் உள்ளோரையும் மட்டுமே பரிசோதிக்கின்றன. சில நாடுகளில் வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளும் ஆற்றல் குறைவாக உள்ளது.

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை