Header Ads

கடும் கட்டுப்பாடுகளுடன் ஹஜ் யாத்திரை நிறைவு

கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிகச் சிறிய அளவிலான ஹஜ் யாத்திரையின் இறுதி வழிபாடாக சமூக இடைவெளியை பேணி யாத்திரிகர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித கஃபாவை வலம் வந்தனர்.

ஆண்டு தோறும் இடம்பெறும் ஹஜ் கடமையில் கடந்த ஆண்டில் 2.5 மில்லியன் யாத்திரிகர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு 10,000 முஸ்லிம்கள் வரையே கலந்து கொண்டனர். முகக்கவசம் அணிந்த யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் இறுதி நாளில் மக்கா நகருக்கு அருகில் இருக்கும் மினாவில் சாத்தானுக்கு கல்லெறியும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

எனினும் வழக்கம் போலன்றி கருமி நீக்கம் செய்யப்பட்ட கற்களையே யாத்திரிகர்கள் பயன்படுத்தினர். ஞாயிறு பின்னேரம் மக்கா பெரிய பள்ளிவாசலை அடைந்த யாத்திரிகர்கள் இறுதியாக தவாப் எனப்படும் கஃபாவை வலம் வந்தனர்.

ஹஜ் வழிபாட்டுக் காலத்தில் புனித தலங்களில் எந்த கொரோனா தொற்று சம்பவமும் பதிவாகவில்லை என்று சவூதி அரேபிய சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹஜ் வழிபாட்டின்போது யாத்திரிகர்கள் சமூக இடைவெளியை பேணி, அடிக்கடி உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட நிலையில் ஹஜ்ஜுக்கு பின்னர் கட்டாய சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு தடவையேனும் செய்ய வேண்டிய கடமையாக ஹஜ் உள்ளது. இது பொதுவாக உலகின் மிகப்பெரிய சமய ஒன்றுகூடலாக உள்ளது.

எனினும் இம்முறை வெளிநாட்டில் இருந்து யாத்திரிகர்கள் வர தடை விதித்த சவூதி நிர்வாகம் உள்நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களை ஹஜ் கடமைக்காக தேர்வு செய்தது.

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.