சிவிலியன், இராணுவத்திற்கு இடையே தென் சூடானில் மோதல்: 127 பேர் பலி

தென் சூடானில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களிடையே இரண்டு நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்டு பெண்கள், சிறுவர்கள் என பலரும் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.  

வட மத்திய மாநிலமான வர்ரப்பில் இராணுவத்தினர் ஆயுதக்களைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பொதுமக்களுடன் மோதல் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் தெரிவித்துள்ளார்.  

தென் சூடான் ஜனாதிபதி சல்வா கிர் மற்றும் அவரின் போட்டியாளரான கடந்த பெப்ரவரி மாதம் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரீக் மச்சர் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமாகவே பொதுமக்களிடம் உள்ள ஆயுதங்களை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதில் இளைஞர் ஒருவரிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியபோதே மோதல் வெடித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர். தப்பிக்க முயன்ற இளைஞர் ஒருவர் மீது இராணுவத்தினர் பின்புறமாக சுட்டதை அடுத்தே மோதல் வெடித்ததாக சிறிய ஆயுதங்களின் தென் சூடான் நடவடிக்கை வலையமைப்பு பணிப்பாளர் ஜெப்ரி டுக் தெரிவித்துள்ளார்.  

இந்த மோதல்களில் 45 இராணுவத்தினர் மற்றும் 82 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 32 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு சூடானிடம் இருந்து தனி நாடாக சுதந்திரம் பெற்ற தென் சூடானில் இரண்டு ஆண்டுகளின் பின் சிவில் யுத்தம் ஒன்று வெடித்தது.    

Thu, 08/13/2020 - 13:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை