அரச நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றமில்லை

- விசேட குழுவினால் ஆராய்ந்தே நியமிக்கப்பட்டுள்ளது

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள், சட்ட ரீதியான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது என, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பீ. ஜயசுந்தரவினால் எழுத்து மூலம் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள், சட்ட ரீதியான நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், ஜனாதிபதியின் இணக்கம் பெறப்பட வேண்டும் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதும், குறித்த நிறுவனங்களில் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்  சபையில்  விசேட குழுவொன்றின் பரிந்துரையின் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதன் காரணமாக குறித்த பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது, தொடர்ந்து கடமையாற்ற அவர்களை அனுமதிக்க வேண்டும் என, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தங்களது அமைச்சுகளின் கடமைகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முதல் ஆரம்பிக்குமாறு, அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பதவிப்பிரமாணத்தை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்று மிக விரைவாக பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று (11) கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள மகுல் மடுவ மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்றுள்ள அமைச்சர்கள் பலர், இன்று தங்களது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதோடு,  இன்னும் சிலர் பொறுப்பேற்கவுள்ளனர்.

 

 

 

Thu, 08/13/2020 - 13:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை