பிறப்புச் சான்றிதழில் இனத்தை குறிப்பிட தேவையில்லை

தேர்தலுக்குப் பின் புதிய திருத்தம் நடைமுறை  

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் எம். சி. விதானகே தெரிவித்துள்ளார்.  

அத்துடன் பிறப்பு சான்றிதழில் தற்போதுள்ள தாய் மற்றும் தந்தையின் திருமணமானவர்களா அல்லது திருமணமாகாதவர்களா என்ற பகுதியும் என்ன இனம் என கேட்கப்பட்டுள்ளபகுதியையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

தந்தை மற்றும் தாய் திருமணமானவர்களா அல்லது திருமணமாகாதவர்களா என்ற விடயம் தொடர்பில் தெரிவிப்பதில் பெருமளவு பிள்ளைகள் சமுக ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு மேற்படி தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

அதேவேளை நாட்டில் சகல பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழில் இலங்கையர் என பதிவு செய்யப்பட்டே வழங்கப்பட்டு வருகின்றன. அந்த நிலையில் இனம் தொடர்பில் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதால், என்ன இனம் என கேட்கப்பட்டுள்ள பகுதியையும் நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  

புதிய டிஜிட்டல் முறையான பிறப்புச் சான்றிதழ் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)   

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/23/2020 - 07:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை