பெறுகை வழிகாட்டி ஆலோசனை சட்டத்தில் திருத்தங்களுக்கு அனுமதி

உள்ளூர் கைத்தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவும் தேசிய ரீதியிலான தொழிற்சாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் பெறுகை வழிகாட்டி ஆலோசனைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்; அரச பெறுகை வழிகாட்டி ஆலோசனைகளில் உள்ளூர் தெரிவிற்கான ஏற்பாடுகள் இருந்த போதிலும் அதன் மூலம் உள்ளூர் விநியோகஸ்தர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பயன்களை பெற்றுக் கொள்வதற்கு உள்ள வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக தேசிய நிறுவனங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் தமது வர்த்தக நடவடிக்கைக்காக அரசாங்கத்தின் ஒத்துழைப்பை அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.  

இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுடன் கூடுதலான பெறுமதியை சேர்க்கக்கூடிய உள்ளூர் தொழிற்றுறை என்ற ரீதியில் இனங்காணப்பட்டுள்ள தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள், மென்பொருள் மற்றும் நிர்மாணத்துறைகளுக்கான தேசிய தெரிவை வழங்கக்கூடியது பொருத்தமானது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  

அதற்கிணங்க அரச நிறுவனங்களுக்காக பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஆகக்குறைந்தது 51 சதவீத உள்நாட்டவர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனம் என்ற ரீதியில் இனங்கண்டு 5 வருட காலத்திற்காக தேசிய தெரிவுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

அதற்கமைய அரச நிறுவனத்திற்கு தேவையான கனணி உள்ளிட்ட பொருட்களுக்கான விபரக்குறிப்புகள் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் தயாரிக்கப்படுவதுடன் வீடு, வீதி, நீர்ப்பாசனம், நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் கட்டமைப்பு உள்ளிட்ட நிர்மாணப் பணிகளை உள்ளூர் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/23/2020 - 06:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை