இனவாதம் தலைதூக்க ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார் என அலி சப்ரி உத்தரவாதம்

அவரது ஆட்சி முஸ்லிம்களுக்கு சாதகமாகவே அமையும் 

ஜனாதிபதி இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டார் என உத்தரவாதம் அளிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் வேட்பாளருமான அலி சப்ரி தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டதால் 95 வீதமான முஸ்லிம்கள் அவருக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால் கடந்த 8 மாதத்தில் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அவரதுஆட்சி முஸ்லிம்களுக்கு சாதகமாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வெலிகம ஜின்னா வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதனை வெலிகம நகரசபையின் முன்னாள் தலைவரும் மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் அமைப்பாளருமான எச்.எச். முஹம்மத் ஏற்பாடு செய்திருந்தார்.பெருந்திரளான முஸ்லிம்கள் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், 

நாம் மிக முக்கியமான தேர்தலொன்றை முன்னோக்கி உள்ளோம்.இத் தேர்தல் முஸ்லிம் சமூகத்துக்கு முக்கியமானதாக விளங்குகின்றது.இத் தேர்தல் முடிவு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு யார் அரசை அமைக்கப்போவது என தீர்மானிக்கப் போகின்றது.எமது ஜனாதிபதி ராஜபக்ஷவின் கரத்தைப் பலப்படுத்தக் கூடிய தேர்தலாகவே இது அமையும் .  

எதிர்வரும் பத்துவருடங்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருப்பார்.அவரோடு இணைந்து செயற்படக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வது எமது கடமை.அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வது நாட்டின் அரசாங்கமே. அரசாங்கத்தின் பங்காளிகளாக ஆக வேண்டும்.  எதிர்க் கட்சியில் இருப்பது எவ்வித பயனும் இல்லை. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 95 வீதமான முஸ்லிம்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்தார்கள்.ஏனெனில் அவர்கள் தவறான முறையில் வழி நடத்தப்பட்டார்கள்.பொய் பிரசாரங்கள் செய்து கோட்டாபய ராஜபக்ஷவை எதிரியாக சித்தரிக்துக் காட்டினார்.முஸ்லிம்களை தொந்தரவு செய்வார், முஸ்லிம்களை தாக்குவார், பெண்கள் நிகாப் அணிய முடியாமல் போகும் என பல்வேறு பொய்களை கூறி முஸ்லிம் மக்களை அச்சப்படுத்தினர்.இதனால் முஸ்லிம்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால் ஜனாதிபதி பதவிஏற்று எட்டுமாதங்கள் கழிந்துவிட்டன. முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டதா? 

எமது ஜனாதிபதி இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டார். அவரோடு நான் நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் நான் உங்கள் மத்தியில் ஒரு உத்தரவாதம் செய்கிறேன். அவருடைய செயற்பாடுகள் அனைத்தும் இனவாதத்துக்கு எதிராக இருந்து வருகின்றது. 

எமது ஜனாதிபதி முன்மாதிரிஆனவர்.அவர் ஆடம்பரம் இல்லாமல் சாதாரண மக்களைப் போலவே செயற்படுகிறார்.அவருக்கு அரச மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும்.  எனினும் அவரது வீட்டிலிருந்து கருமங்களைச் செய்து வருகிறார்.இதன் மூலம் அவர் அனைவருக்கும் முன்மாதிரியை சுட்டிக்காட்டுகிறார்.மக்கள் சேவையே அவரது பிரதான குறிக்கோள்.பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற்ற மடையவேண்டாம். “கண்ணால் பார்ப்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதே உண்மை” இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

ஜனாதிபதிஅவரது திட்டமிடல் மூலமாக கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாத்து உள்ளார்.இதனை இனரீதியாக நோக்கவில்லை. இலங்கையர் என்றவகையில் நோக்கினார்.நாம் சிந்திக்க வேண்டும் இந்த தலைமைத்துவத்தை ஆதரித்து அவரோடு கொடுப்பதா?அல்லது விலகிச் செல்வதா? 

அவர் ஒரு போதும் இனவாதிஅல்ல.நாட்டை நேசிக்கின்ற மாபெரும் தலைவர்.அவரதுஆட்சி முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையும்.இனரீதியான கட்சிகள் உருவானதாலேயேபல்வேறுபிரச்சினைகள் தோன்றின.நாம் எப்போதும் தேசியக் கட்சிகளோடு இணைந்து போகவேண்டும்.கடந்த காலங்களில் தேசியக் கட்சிகளோடு இணைந்து முஸ்லிம்கள் சேவைசெய்தனர்.கலாநிதி பதியுதீன் மஹ்மூத்.டி.பி.ஜாயா,எம்.எச்.முஹம்மத், ஏ.ஸீ.எஸ்.முஹம்மத் போன்றோர் தேசியகட்சியின் ஊடாகசேவை செய்தனர்.அவ்வாறு தேசியகட்சிகளோடும் பெரும்பான்மையோடும் நாடுகள் இணைந்துசெல்வது நாட்டுக்கும் எமக்கும் நன்மை பயக்கும் என்றார்.  

இந்நிகழ்வில் அமைச்சர் டலஸ் அலகப்பெருமவும் உரையாற்றினார்.

வெலிகம தினகரன் நிருபர்

Thu, 07/23/2020 - 06:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை