ஒன்லைனில் வகுப்புகள்: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற அமெ. உத்தரவு

பல்கலைக்கழகங்களின் வகுப்புகள் அனைத்தும் ஒன்லைனில் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த விதிகளுக்கு இணங்காவிட்டால் நாடுகடத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் நிறுவனம் எச்சரித்துள்ளது.  

ஒன்லைன் மூலம் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது ஒன்லைன் முறையில் அல்லாமல் நேரடியாக மாணவர்களுக்கு கற்பிக்கும் பல்கலைக்கழங்களில் தங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல பல்கலைக்கழகங்கள் ஒன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளன. இந்த புதிய அறிவிப்பினால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவின்றி உள்ளது.

ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்கு கற்பதற்குச் செல்வதோடு அவர்களில் பெரும்பாலானவர்கள் முழு வகுப்புகளுக்குமான கட்டணங்களையும் செலுத்துவது பல்கலைக்கழகங்களுக்கு வருவாய் ஈட்டுவதாக உள்ளது.

இந்நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய விதி கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான எப்–1 மற்றும் எம்–1 மாணவர்களுக்கு பொருந்தும். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2019 கல்வி ஆண்டில் 388,839 எப். விசாக்களையும் 9,518 எம். விசாக்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

பல்கலைக்கழகங்களில் இருப்பவர்கள் உட்பட புதிய கல்வி ஆண்டுக்காக வரும் மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமே அனைத்துப் பாடங்களும் நடத்தப்படும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Wed, 07/08/2020 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை