சர்வதேச விமர்சனங்களை துருக்கி ஜனாதிபதி எர்துவான் நிராகரிப்பு

துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் இருக்கும் வரலாற்று புகழ் மிக்க ஹகியா சோபியா கட்டடத்தை பள்ளிவாசலாக மாற்றியதைத் திரும்பப் பெறும்படி தேவாலயங்களின் உலக சபை விடுத்த கோரிக்கையை துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நிராகரித்துள்ளார்.

நாட்டின் விருப்பிற்கு அமைய அந்தக் கட்டடத்தை பயன்படுத்தும் உரிமை இருப்பதாக எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.

இதனை பள்ளிவாசலாக மாற்றுவது பற்றி தொடர்ந்து கூறி வந்த எர்துவான், 2018 ஆம் ஆண்டு ஹகியா சோபியாவில் குர்ஆன் வசனங்களையும் ஓதினார்.

“தமது சொந்த நாட்டில் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக எதுவும் செய்யாதவர்கள் துருக்கியின் இறையாண்மை உரிமையை பயன்படுத்துவதற்கு எதிராக தாக்குதல் தொடுக்கின்றனர்” என்று கடந்த சனிக்கிழமை உரையாற்றிய எர்துவான் குறிப்பிட்டார்.

1,500 ஆண்டு பழமையான ஹகியா சோபியா கட்டடம் ஒரு ஓர்தடொக்ஸ் கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தபோதும் தற்போது ஸ்தான்புல் என அழைக்கப்படும் கொன்ஸ்டாடினோபிலை 1453 இல் உஸ்மானியர்கள் ஆக்கிரமித்த பின் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. மதச்சார்பற்ற துருக்கி அரசு 1934 இல் அதனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றியது.

எனினும் 1934இல் எடுக்கப்பட்ட முடிவை உயர் நீதிமன்றம் ரத்துச் செய்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அந்தக் கட்டடத்தை ஒரு பள்ளிவாசலாக பிரகடனம் செய்த எர்துவான் தொழுகை நடத்த அனுமதி அளித்தார். வரும் ஜூலை 24 தொடக்கம் யுனெஸ்கோ மரபுரிமை சொத்தாக இருக்கும் இந்தக் கட்டடத்தில் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவுக்கு கிரேக்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டதோடு பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஏமாற்றத்தை வெளியிட்டன. இந்த முடிவு குறித்து ரஷ்யா வருந்துவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ரூஷ்கோ தெரிவித்தார்.

இந்நிலையில் தேவாலயங்களின் உலக சபை, எர்துவானுக்கு எழுதிய கடிதத்தில் “கவலை மற்றும் அதிர்ச்சி’ வெளியிடப்பட்டிருந்ததோடு இந்த முடிவை உடன் திரும்பப் பெறும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.

Mon, 07/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை