சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுறையினரை பாதுகாக்க அரசு நிவாரணங்கள் அறிமுகம்

வரி, தண்டப்பணத்துக்கு கால அவகாசம்

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தத்திற்கு மத்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரை பாதுகாப்பதற்காக அரசாங்கம் வரி நிவாரணங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக உயர்கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் வெகுஜன ஊடகத்துறை மற்றும் அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளோர் தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்காக விரிவான வாய்ப்பை வழங்கி அவர்களது வரிச் சுமையில் தளர்வை ஏற்படுத்துவதற்காக வரிமுகாமைத்துவ நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதை  அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கமைவாக கடந்த ஜூ 03ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதிக்குள் அனைத்து வகையிலான வரிதொடர்பிலான தண்டப்பணத்திலிருந்து விடுவிப்பதற்கும்,அவ்வாறான தண்டப் பணத்தை மீண்டும் அறவிடுதல் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிவாரணத்திற்கு மேலதிகமாக கீழ் கண்ட நிவாரணங்களும்,சிறிய மற்றும் நடுத்தரஅளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்கும்,அதற்கமைவாக சட்டஒழுங்குவிதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும்,சட்ட ஒழுங்கு விதி விதிக்கப்படும் வரையில் இந்தநிவாரணங்களை உனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி,பொருளாதார மற்றும் கொள்கைஅபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேண்டுமென்றே வரி செலுத்துவதை தட்டிக் கழிப்பது இடம்பெறவில்லையென்பதில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் திருப்தி கொள்வாராயின் 2018/2019 மதிப்பீட்டு ஆண்டுவரையில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டு அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய எஞ்சிய வருமான வரியிலிருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019/2020 மதிப்பீட்டு வருடத்திற்காக வருமானவரி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வரிகள் செலுத்தப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தரஅளவிலான தொழிற்துறையினருக்கு மீண்டும் மேலதிக மதிப்பீடுகளை வெளியிடாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டை முன்வைக்கும் பொழுது சமர்ப்பிக்கப்பட வேண்டிய வங்கிப் பிணை அல்லது மீள்செலுத்தப்படாத தொகையை செலுத்துவதற்காக வழங்கப்படும் தொகைக்கான காலஎல்லை நீடிக்கப்படும்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் தற்பொழுது உடன்பட்டுள்ள பாக்கி/செலுத்தத் தவறியுள்ள வரியை செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தடைஉத்தரவை நடைமுறைப்படுத்துவதை 2021 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரையில் இடைநிறுத்துதவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 30ஆம் திகதிவரையிலான காலப் பகுதிக்குட்பட்ட வகையில் ஏதேனும் வரியைசெலுத்துதல் அல்லது/மற்றும் வரிஅறிக்கை வழங்குதல் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்வதற்காக வசதி செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட வரியைசெலுத்துதல்/அறிக்கையை கையளிக்கப்படும் தினத்தில் கையளிக்கப்பட்டதாக கருதவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக,பொருளாதார ரீதியலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள பின்ணணியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரை பாதுகாப்பதற்காக அரசாங்கம் ஆகக்கூடிய வகையில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை