மியன்மார் சுரங்க விபத்தில் 113 பேர் பலி

வடக்கு மியன்மாரில் பச்சை மாணிக்கக் கல் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலச்சரிவை அடுத்து குறைந்தது 113 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கச்சின் பிராந்தியத்தின் ஹ்பகண்ட் பகுதியில் இருக்கும் இந்தத் தளத்தில் காணாமல்போயுள்ள பலரையும் தேடி மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கனமலையை அடுத்து ஏற்பட்ட சேற்று அலையில் அங்கு கற்களைச் சேகரித்துக் கொண்டிருந்தவர்கள் புதையுண்டனர் என்று தீயணைப்புச் சேவை குறிப்பிட்டுள்ளது.

கழிவுக் குவியல் சரிந்ததை அடுத்து மக்கள் கூச்சலிட்டுக் கொண்டு ஓடியதாக 38 வயதான சுரங்கத் தொழிலாளி மவுங் கயிங் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். “ஒரு நிமிடத்திற்குள் அவர்கள் கீழே சென்று மாயமானார்கள். எனது மனது வெறுமையை உணர்ந்தது. சேற்றுக்குள் சிக்கிய மக்கள் உதவி கேட்டு கத்தியபோதும் ஒருவராலும் உதவ முடியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் மிகப்பெரிய பச்சை மாணிக்கக் கல் வளம் கொண்ட நாடாக மியன்மார் இருந்தபோதும் அந்த சுரங்கங்களில் அடிக்கடி விபத்துச் சம்பவங்கள் பதிவாகின்றன. இவ்வாறான சுரங்க விபத்துகளில் கடந்த ஆண்டில் மாத்திரம் நூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மியன்மாரில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுரங்க விபத்தில் 116 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. சேற்று மண் சரிவினால் வெள்ள நீர் நிரம்பிய பள்ளத்தாக்கு ஒன்றில் மிட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபடும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளன. சுரங்க தளத்தில் அப்புறப்படுத்தப்படும் மண் குவியல்கள் மற்றும் லொர்ரிகளைச் சூழ பச்சை மாணிக்கக் கற்களைத் தேடுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று சேர்கின்றனர்.

மியன்மாரின் பச்சை மாணிக்கக் கல் வர்த்தகம் ஆண்டுக்கு 30 பில்லியன் டொலர் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Fri, 07/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை