சுகாதார சேவையிலுள்ளோர் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கவும்

சுகாதார சேவையிலுள்ளோர் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கவும்-Postal Voting Due Until June 08

- ஜூன் 08 வரை தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
- வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்கள்

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும், சுகாதார சேவை ஊழியர் ஒருவரை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதால், சுகாதார சேவையிலுள்ள அனைத்து ஊழியர்களையும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்குமாறு,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள் சிலவற்றை வலயமாக இணைத்து, அதற்கென ஒரு வைத்தியர் மற்றும் தாதியர் இருவரை கடமையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மஹிந்த தேசப்பிரிய, சுகாதார சேவை ஊழியர்கள் அனைவரும் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்குமாறும் அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்களை அருகிலுள்ள பிரதேச அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் தேர்தலில் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதால் அவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே இந்த கால நீடிப்பு வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை 09ஆம் திகதி பிரதேச தேர்தல் அலுவலகங்களில் ஒப்படைப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவசியமான  சுகாதார பரிந்துரைகள் உள்ளடங்கிய வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் நேற்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

தபால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய விதம், அதில் பங்கேற்க வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கை, தேர்தல் தினத்திலான செயற்பாடுகள், வாக்குகளை எண்ணுவது தொடர்பான சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் உள்ளிட்டவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், தேர்தல் கூட்டங்கள் நடாத்தும் விதம், வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது தொடர்பான வழிகாட்டல்களும் அதில் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகள், உதவித் தேர்தல் ஆணையர்கள் மற்றும் பொது அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் திங்களன்று (08) கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அக்குகூட்டத்தில் தேர்தல் திகதியை தீர்மானித்து அறிவிக்கவுள்ளது.

அதற்கமைய, அனைத்து மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு அலுவலகங்களின் பணிகளும்  திங்கள்கிழமை முதல் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் காலத்தில், அரச சொத்துகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு, நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Thu, 06/04/2020 - 12:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை