உள்நாட்டு கைத்தறி, பத்திக் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு அரசு விசேட திட்டம்

இறக்குமதி தடையுடன் பொற்காலம் உதயம்

கைத்தறி மற்றும் பத்திக் புடைவை இறக்குமதிக்கு தடைவிதிக்க ஜனாதிபதி முடிவு எடுத்துள்ள நிலையில் எதிர்காலத்தில் உள்நாட்டு புடைவை, கைத்தறி மற்றும் பத்திக் உற்பத்திகள் பாரிய முன்னேற்றத்தை அடையும் என கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

பாடசாலை பாதுகாப்புத் தரப்பு சீருடைகளுக்கு தேவையான துணிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களினூடாக பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பத்திக் ஆடைகளை ஊக்குவிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இது தொடர்பாக விளக்கமளித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

உள்ளூர் கைத்தறி, பத்திக் மற்றும் ஆடைக் கைத்தொழில் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூர் கைத்தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்காக கைத்தறி மற்றும் பத்திக் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க இதன் போது முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எமது உற்பத்திகளை வெளிநாட்டவர்கள் விரும்பி வாங்குகின்றனர். கடந்த ஆட்சியில் பாடசாலை சீருடைத் துணி வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் வவுச்சர் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட சீருடை துணிகளை வழங்குவதை விட உள்ளூர் துணிகளை வழங்குவதினூடாக அரசாங்கத்திற்கு பெருமளவு நிதி மீதப்படும். இது தவிர பிராந்திய கல்வி அலுவலகங்களுக்கே துணிகளை அனுப்ப உள்ளூர் உற்பத்தியாளர்கள் உடன்பட்டுள்ளதால் போக்குவரத்து செலவும் மீதமாகும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வெளிநாட்டு துணியையும் கலந்தே மாணவர்களுக்கு வழங்குவதாக கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே இது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சுகாதார துறையினரின் சீருடைகளுக்காகவும் உள்நாட்டு உற்பத்தி துணிகளை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர வெள்ளிக்கிழமைகளில் பத்திக் ஆடைகளை அணிந்துவதை ஊக்குவிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஷம்பாஹிம்

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை