கொரோனா வைரஸ் சீற்றத்தால் சிக்கி திணறும் லத்தீன் அமெரிக்க நாடுகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 375,000ஐ தாண்டி இருப்பதோடு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த நோய் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஐரோப்பாவில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றினால் லத்தீன் அமெரிக்காவெங்கும் சுகாதார கட்டமைப்பு நிலைகுலையும் அச்சம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இங்கு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசிலில் உயிரிழப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளது.

எனினும் பாடசாலைகள், நீச்சல் தடாகங்கள், மதுபானக் கடைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு ஐரோப்பாவில் இயல்பு வாழ்வு திரும்பி வருகிறது. எனினும் முடக்க நிலை தளர்த்தப்படுவது வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் பற்றி அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 கடைசியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் குறைந்தது 6.2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகளாகும். இதன்படி பிரேசில், பெரு, சிலி மற்றும் மெக்சிகோவில் நாளாந்த நோய்த் தொற்று அதிகமாக இருப்பதோடு ஆர்ஜன்டீனா, பொலிவியா, கொலம்பியா மற்றும் ஹெய்டி நாடுகளில் அது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பிராந்தியத்தில் நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டி 50,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்களில் பாதிக்கும் அதிகமானது பிரேசிலில் பதிவாகி இருப்பதோடு உயிரிழப்பில் 60 வீதமானது அந்நாட்டில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் அங்கு பிரபலச் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஆபிரிக்க பிராந்தியத்திலும் வைரஸ் தொற்று மோசமடைந்து வருகிறது. அங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 150,000ஐ தாண்டி இருப்பதோடு 4,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Wed, 06/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை