தரிசு நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் கோரிக்கைக்கு அரசாங்கம் தெளிவான பதிலளிக்க வேண்டும்

பிற மாவட்டங்களிலிருந்து மலையகம்  திரும்புபவர்களின் வாழ்வாதாரத்துக்காக தரிசு நிலங்களைப் பகிர்ந்தளிப்பது என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தமது நிலைபாட்டினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின்  பிரதி பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையிலேயே அரசாங்கம்,  கம்பனிகள், தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்த கட்சிகள் ஆகியவற்றுக்கு இடையில் முடிவு பெறாத இழுபறி நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

பெருந்தோட்ட துறையில் உள்ள நிலங்கள் அனைத்துமே கம்பனிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் குத்தகைக்கு உட்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது காடாக்கப்பட்ட இடங்களானாலும் சரி அல்லது தரிசு நிலங்களாக இருந்தாலும் சரி அதனை இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தோட்ட நிர்வாகமோ, கம்பனிகளோ எந்த அடிப்படையில் இணக்கம் வெளியிடப் போகின்றன என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.

இது தெளிவுப்படுத்தப்படாத பட்சத்தில் தொழிற்சங்கங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதனையும் அரசாங்கம் எப்படி இதில் தலையிட்டு காணிகளை பிரித்துக் கொடுக்கும் மற்றும்  நடைமுறை ரீதியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்படும்.

விவசாய நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீது தோட்ட நிர்வாகங்கள் பொலிஸில் முறைபாடு செய்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது பற்றிய முறைபாடுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. பலவிதமாக ஆசை காட்டப்பட்டு உறுதியளிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதாலேயே தொழிலாளர்கள் தொழிற்சங்களின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் கைத்தொழில்களை ஆரம்பிப்பது என்ற யோசனையையும் முன்வைக்கப்பட்டதாக அறிகிறேன். என்ன வகையான உற்பத்திகள் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளன? இதற்கு முதலீடு செய்வது யார்? எவ்வாறான சந்தை வாய்ப்புகள் இதற்காக ஏற்படுத்தப்படும்? இடம் பெயர்ந்து வருபவர்கள் இங்கு வந்து எத்தனை மாதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும்? அதுவரை  இவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? என்பதற்கெல்லாம் விளக்கமான விடைகளை சமூகத்திற்கு தெரிவிக்காவிட்டால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்.

இந்நிலைமை மீண்டும் மீண்டும் தொடரக்கூடாது. இது ஆயிரக்கணக்கானவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் திட்டங்கள். 

ஆகவே தரிசு நிலங்கள் எப்படி அடையாளம் காணப்பட போகின்றன? பெருந்தோட்டத்துறையில் அவ்வாறான தரிசு நிலங்கள் உள்ளனவா? அவ்வாறான நிலங்கள் வழங்குவதற்கு நிர்வாகமோ அல்லது கம்பனிகளோ இணக்கம் தெரிவித்து விட்டனவா?  இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு என்ன? என்பது பற்றி குழப்பமில்லாத விளக்கத்தினை சம்பந்தப்பட்டவர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

(பூண்டுலோயா நிருபர்)

Wed, 05/06/2020 - 14:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை