அரச நிறுவனத் தலைவர்கள், பணிப்பாளர்களாக இராணுவம்

ஜனநாயக செயற்பாடுகளுக்கு கேள்விக்குறி

அரசாங்க நிறுவனங்களுக்கு தலைவர்களாக பணிப்பாளராக இராணுவம்  மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் ஜனநாயக செயற்பாடுகள் கேள்விக்குட்படுத்தப் படுவதாக  முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டியில் தனது இல்லத்தில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உயர் மட்டத்தினர் சிலர் உடனான சந்திப்பின் போது ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த நாள் முதல் படிப்படியாக அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள், ஓய்வுபெற்ற படை வீரர்களை நியமித்து வருகின்றார்.  இரு தினங்களுக்கு முன்னர்   அமைச்சுக்கள் திணைக்களங்களின் உயர் பதவிகளில்  மாற்றம் ஏற்படுத்தி உள்ளார். இதில் மூவர் இராணுவ உயர் அதிகார மட்டத்தில் இருந்தவர்கள்.

ஏற்கனவே இரு மாகாண ஆளுநராக இராணுவ உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளில் கூட படை உயர்  அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஜனாதிபதி முன்னாள் படை வீரர் என்பதால்  அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாக படை அதிகாரிகளை  தோர்ந்தெடுப்பதாக இருக்கலாம். ஆனால் ஜனநாயக நாட்டில் அரச நிறுவனங்களுக்கு நிர்வாகத் திறமை கொண்ட சிவில் சமுக அதிகாரிகளே நியமிக்கப்படவேண்டும். இந்த நிலை தொடர்வது  நியாயமானதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் கட்சிகள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில்  எம்மிடத்தில் முரண்பாடு இருக்க முடியாது.  சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனநாயக ரீதியில் நாங்கள் எமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க  வலியுறுத்தினார்.

எம்.ஏ.எம். நிலாம்

Thu, 05/14/2020 - 09:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை