நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் அரசுக்கு நட்டம்

கடந்த அரசின்செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணை அவசியம்

நெல் சந்தைப்படுத்தும் சபையிலிருந்த நெல்லை கடந்த அரசாங்கம் 24 ரூபா வீதம் குறைந்த விலைக்கு விற்று நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,  அரிசி விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லை கடந்த அரசு குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்றது. கடந்த அரசில் கறுப்புப் பணம் திரட்டப்பட்டது. சீசெல்ஸிலிருந்து கறுப்புப் பணத்தை எடுத்து வரவே அங்கு விமானம் அனுப்பப்பட்டதாக ஹெரிசன் கூறியுள்ளார்.

ஆனால் நாம் ஆட்சியை பொறுப்பேற் கையில் நெல் சந்தைப்படுத்தும் சபையில் ஒரு மணி நெல்கூட இருக்கவில்லை.

நெல்லை கிலோ 24 ரூபா வீதம் விற்று நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கினார்கள். இது தொடர்பில் விசேட விசாரணையை நடத்துமாறு அரசிடம் கோருகிறோம். இதனால் நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டது என்றார்.

முன்னாள் எம்.பி.உதய கம்மம்பில கூறியதாவது, இலங்கையர்கள் பலர் நாடு திரும்ப காத்திருக்கையில் சீசெல்ஸ் நாட்டவர்களுக்கு சிகிச்சைக்காக இங்கு வர அனுமதித்துள்ளதாக எதிரணி குற்றஞ்சாட்டுகிறது.

சிகிச்சை அளிக்கவும் சத்திர சிகிச்சை செய்யவும் மூன்று நாடுகளுடன் சீசெல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.அதில் இலங்கையும் அடங்கும். நாட்டுக்கு சிகிச்சைக்காக வருபவரை மரணிக்கவிட முடியுமா?

குறைந்த கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ள நாடுகளிடையே இலங்கையும் உள்ளது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது எமது பொறுப்பாகும். கொரோனா பரவுவதோடு தமது நாடுகளிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அனுப்புமாறு எமது நாடு தான் முதலில் கோரியது. வூஹானில் சிக்கியிருந்தவர்களை அழைத்து வர எமது நாடு தான் முதலில் கோரியது.

நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சகலரையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 05/29/2020 - 07:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை