முடக்க நிலைக்கு மத்தியில் உலகெங்கும் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட்டம்

கொரோனா வைரஸ் முடக்க நிலைக்கு மத்தியில் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் வழக்கமான பள்ளிவாசல் தொழுகை, குடும்ப ஒன்று கூடுல்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவு இன்றி ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடினர்.

புனித ரமழான் மாத நிறைவில் புதிய பிறை தென்பட்டதும் கொண்டாடப்படுகின்ற நோன்புப் பெருநாள் முஸ்லிம்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

எனினும் இம்முறை பெருநாள் பெரும்பாலான நாடுகளில் சோபை இழந்து காணப்படுகிறது.

சவூதி அரேபியா தொடக்கம் எகிப்து, துருக்கி மற்றும் சிரியா வரை கூட்டுத் தொழுகைகளுக்கு தடை விதிக்கப்பட்டு வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் புனிதத் தலங்களைக் கொண்ட சவூதி அரேபியாவில் கொவிட்-19 தொற்று தீவிரம் அடைந்திருப்பதொடு வளைகூடா நாடுகளில் அதிகபட்சமாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் புனித மக்கா மற்றும் மதீனா பள்ளிவாசல்களில் வழிபாட்டாளர்கள் இன்றி பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

மக்கா பெரிய பள்ளிவாசல் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வழிபாட்டாளர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது.

இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசல் பெருநாளைக்கு பின்னரே திறக்கப்படும் என்று அதன் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

லெபனானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு மாத்திரமே பள்ளிவாசல்கள் திறக்கப்படும் என்றும் வழிபாட்டாளர்களின் உடல் வெப்பனில்லை கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நாட்டு உயர் சுன்னி மத நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும் ஆசியாவில் இந்தோனேசியா தொடக்கம் பாகிஸ்தான், மலேசியா மற்றும் ஆப்கானிஸ்தான் வரை பெருநாளைக்கு முன்னரான பொருட்கள் மற்றும் அடைகள் வாங்குவதற்கு மக்கள் வீதிகளில் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. இதனால் பெரும் கூட்டங்களை கலைக்க பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன.

கொவிட்-19 தொற்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விடவும் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் குறைவாக காணப்பட்டபோதும் அந்த எண்ணிக்கை நிலையாக உயர்ந்து வருகிறது.

மத்திய கிழக்கில் அதிக உயிரிழப்பு பதிவாகி இருக்கும் ஈரானில் பெருநாளை ஒட்டி மக்கள் பயணங்கள் செய்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் சுகாதார ஒழுங்குகளை பின்பற்றாத நிலையில் வைரஸ் தொற்று புதிய உச்சத்தை தொடுவதை தவிர்ப்பதில் கடும் அவதானம் செலுத்தப்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சர் சயீட் நமகி தெரிவித்துள்ளார்.

பெருநாளை ஒட்டி ஐக்கிய அரபு இராச்சியத்திலும் முடக்க நிலை கடுமையாக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு நேர ஊரடங்குச் சட்டம் 10 மணிக்கு பதில் 8 மணிக்கே ஆரம்பிக்கப்படுகிறது.

Mon, 05/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை