மட்டக்களப்பு மாவட்டத்தினரை சொந்த இடங்களுக்கு கொண்டுவர பிரதமர் உதவ வேண்டும்

முன்னாள் எம்.பி.  ஸ்ரீநேசன் நேரில் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தை அண்டியுள்ள வெளி மாவட்டங்களில்  கூலிவேலை செய்யும் மட்டக்களப்பு மாவட்டத்தினர் ஆங்காங்கே அனாதரவாக நிற்கின்றனர்.  அவர்களை சொந்த இடங்களுக்கு கொண்டுவர பிரதமர் உதவ வேண்டும்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி.ஜீ. ஸ்ரீநேசன்   பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நேரில் கோரிக்கை விடுத்ததாகவும் அதனை நிறைவேற்றுமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாகவும் மட்டக்களப்பு  மாவட்ட தமிழத் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி.ஜீ. ஸ்ரீநேசன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்திருந்தார். மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள்  அக்கலந்துரையாடலில் பங்கு கொள்ளாதிருந்த போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  அதில் பங்கேற்றிருந்தது. நாம் அரசாங்கத்தின் நற்காரியங்களை ஆதரிக்க வேண்டும். கொரோனா வைரசும், அதனால் வந்த ஊரடங்கும் வடக்கு, கிழக்கு மக்களை மட்டுமல்ல உலக நாடுகளையும் வேதனை கலந்த நெருக்கடிக்குள் தள்ளி விட்டிருக்கிறது. ஆதலால் எமது மக்களின் பிரச்சனைகளை நாம் இந்த நாட்டின் அரசோடு பேசித் தீர்ப்பதை தவிர வேறு உபாயங்கள் ஏதும் தெரியவில்லை. இன்று (நேற்று) நடந்த கூட்டம் அரசியல் கூட்டமல்ல அது கொரோனாவின் பிடியில் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளையும் இனிமேல் எடுக்கப் போகும் நடவடிக்கைகளையும் விபரிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டதாகும் என எண்ணத் தோன்றுகிறது.

இதுபற்றி  அவர் மேலும் விபரிக்கையில்,  இந்த கூட்டத்தில் எனது கோரிக்கைகளை பிரதமர் விபரமாக கேட்டார். நான் தெளிவாக விடயங்களை முன்வைத்தேன். இன்றைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அனேகர் மட்டக்களப்பை அண்டியுள்ள பொலன்னறுவை, வவுனியா, மன்னார், பதுளை மாவட்டங்களில்  அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்கள். அங்கே தற்காலிகமாக தங்கி நிற்பவர்கள். அவர்கள், தங்களை அழைத்துச் சென்ற முதலாளிகளை நம்பியே சென்றிருக்கின்றனர். தூரதிஷ்டவசமாக கொரோனாவும. ஊரடங்கும் வந்து அவர்களின் வயிற்றில் அடித்துவிட்டது. அங்கு அவர்களால் கூலிவேலை செய்ய முடியாது. அதனால் அவர்களுக்கு வருமானமுமில்லை, வெளிமாவட்டமாக இருப்பதால் தமது ஊருக்கு வரவும் முடியாது. உண்ணவும் உணவுமில்லை என்ற நிலையில் உள்ளனர்.

ஆதலால் அவர்களை அழைத்து வருவதற்கு அரசு உதவ வேண்டுமென தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவாக  உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பாராளுமன்ற உறுப்னர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

புளியந்தீவு குறூப் நிருபர்

Tue, 05/05/2020 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை