இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனுஷ்டிக்க மக்களுக்கு அழைப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் படுகொலை பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

எனினும் இம் முறை நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார பாதுகாப்பு கருதி வீடுகளிலேயே அனுஷ்டிக்குமாறு பல்வேறு தரப்புக்களினாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இவ் அஞ்சலி நிகழ்வு தொடர்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு தெரிவிக்கையில்,

இது ஓர் தேசிய நினைவெழுச்சி நாள். உட்பூசல்களைத் தவிர்த்து தமிழ்த் தேசியத்தால் ஒன்று௯டும் நாள். கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காய் நீதி வேண்டிய பயணத்தில் தமிழராய் ஒன்றிணையும் நாள். அந்தவகையில் இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தில் ஆகுதியான ஆன்மாக்களுக்கு ஈகைச் சுடரேற்றி பிரதான நினைவஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

இரவு 7மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் விசேட  மணி ஒலி எழுப்பியும், அச் சந்தர்ப்பத்தில் வீடுகளில் தீபங்கள் ஏற்றியும் இப் பேரவலத்தில் உயிர் நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துங்கள்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரவல நிலைமையை நினைவுபடுத்தும் வகையில் இன்று கஞ்சி தயாரித்து பகிர்ந்து கொள்ளுமாறும், இன்று எதாவது ஒரு நேரத்திலாவது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக நினைவேந்தலை மேற்கொள்ளுமாறும் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.இது தவிர தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து தமிழ் மக்களும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி அவர்கள் அவர்கள் வீடுகளிலாவது நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும், யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாங்குளம்குறூப்நிருபர்

Mon, 05/18/2020 - 10:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை