இணையத் தள வழி கல்வியை மாணவர்கள் தொடர வேண்டும்

கொரோனாவும் அது தோற்றுவித்த ஊரடங்குக் காலமும் இப்போது தொடர்ந்து வருகிறது, எனவே வீட்டில் இருந்தே மாணவர்கள் கற்கவேண்டும். அதற்காக கிழக்கின் கல்வித் திணைக்களம் மாணவர்களுக்கு இணையத் தளங்கள்  வழியான கல்வியை தருகிறது. அதை மாணவர்கள்  தொடர வேண்டுமென மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.  அண்மைய க.பொ.த.(சா/த) பரீட்சைப் பெறபேறு கிழக்கின் கல்வித் தரத்தை தேசிய மட்டத்தில் சிறிதாக உயர்த்தியுள்ளது. அது பாராட்டத்தக்கது. இன்னமும் முன்னேற இடமிருக்கிறது. அது முன்னேறுமென்ற நம்பிக்கை தெரிகிறதென கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத்  தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றைப் பொருத்தவரை தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் கல்வி  நிலையை 9ம் இடத்திலிருந்து 7ம் இடத்திற்கு உயர்த்தியுள்ளது. இதுபற்றி ஆளுநரிடம் அவரது அபிப்பிராயத்தை கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் பல பிரயத்தனங்களை எடுத்து வருகிறது. அதனால் கல்வித்தரம் மேம்பாடு கண்டு வருகிறது. கொரோனா வைரசும் அது தோற்றுவித்த ஊரடங்கும் ஒரு தடங்கலை ஏற்படுத்திவிட்டது. இதனை தாண்டுவதற்காக இணைய வழி மூலமான கல்விகள், பரீட்சைகள், வினாத்தாள்கள் என்பன  கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மூலமாக மாணவர்களுக்கு ”வட்சப் வழி”யாக தரப்படுகிறது. கிழக்கின் கல்வி வலயங்கள் 17லும் 147 ”வட்சப்” குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கற்று ஒரு சாதனையைப்  படைக்க வேண்டும் என்றார்.

புளியந்தீவு குறூப் நிருபர்

Mon, 05/04/2020 - 07:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை