கொவிட்-19: ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: தென் அமெரிக்கா, ஆபிரிக்காவில் தீவிரம்

ஐரோப்பாவில் முடக்க நிலையை தளர்த்தும் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஒன்றாக இத்தாலியில் நேற்று முதல்முறை உணவகங்கள் மற்றும் தேவாலயங்கள் மீண்டும் திறக்கப்பட்ட அதேவேளை பிரேசில், தென் ஆபிரிக்கா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்த வைரஸினால் பெரும் சரிவுக்கு உள்ளாகி இருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பல அரசுகளும் ஈடுபட்டிருக்கும் சூழலிலேயே முடக்க நிலைகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஜப்பான் பொருளாதார மந்தநிலையை சந்தித்திருப்பதோடு கடுமையான பொருளாதார வீழ்ச்சி குறித்து அமெரிக்க மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

எனினும் நோய்த் தடுப்பு மருந்து இன்னும் இல்லாத நிலையில் விரைவாக முடக்க நிலையை தளர்த்துவது வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த அமைப்பின் உலக சுகாதார மாநாடு நேற்று ஆரம்பமான நிலையில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த இத்தாலி அவதானத்துடன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இரண்டு மாதம் முடக்க நிலைக்குப் பின்னரே அந்நாட்டில் வர்த்தகங்கள் மற்றும் தேவாலயங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

“அனைத்து சமூகத்தினரதும் ஒரு நம்பிக்கையின் அடையாளமாக வழிபாட்டு கூட்டங்களில் ஒன்றிணைய முடிந்திருப்பது பற்றி அந்த சமூகங்களுடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்” என்று பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரடி ஒளிபரப்பு மூலம் நடத்திய பிரார்த்தனையில் குறிப்பிட்டார்.

ரோம் நகரின் மையப்பகுதியின் ஒரு சுதந்திர பகுதியாக இருக்கும் வத்திக்கானில் இத்தாலியின் அதே வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் கொவிட்-19 வைரஸ் தீவிரம் அடைந்ததை அடுத்து நோய்த் தொற்று மற்றும் மரணங்கள் அதிகரித்து மருத்துவமனைகளிலும் நோயாளர்கள் நிரம்பி வழிந்த நிலையில் கடும் முடக்க நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

உணவகங்கள், மதுபானக் கடைகள், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் கடைகளை திறப்பதற்கு நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் மே 25 ஆம் திகதி உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினிலும் முடக்க நிலை மேலும் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதோடு, ஜெர்மனியில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் அதிகம் தளர்த்தப்பட்டு நாட்டின் முன்னணி கால்பந்து லீக் போட்டிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் காலியான மைதானங்களிலேயே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

வார இறுதி நாட்களின் கட்டுப்பாடுகளும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் தளர்த்தப்பட்டு வருகின்றன. பிரான்ஸ், கிரேக்கம் மற்றும் இத்தாலி நாடுகளில் மக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதோடு பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை பூங்காக்களுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கா, ஆபிரிக்காவில் தீவிரம்

ஐரோப்பாவில் வைரஸ் தொற்றுக் குறித்து நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் நிலையில், இதனால் உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு 316,000க்கும் அதிகமாகும். இந்நிலையில் தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க பிராந்தியத்தில் நிலைமை மோசமடைவது கணக்கெடுப்புகள் காட்டுகின்றன.

அண்மைய தினங்களில் பிரேசிலில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வார இறுதிக்குள் அந்நாட்டில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் 241,000 ஐ தாண்டியுள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசில் தற்போது நோய்த் தொற்றாளர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

எனினும் இந்த நோய்த் தாக்கம் குறித்து பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ தொடர்ந்தும் குறைத்து மதிப்பிட்டு வருகிறார். நாட்டில் முன்னெடுக்கப்படும் முடக்க நிலையை எதிர்க்கும் அவர் அது பிரேசில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கூறி வருகிறார். எனினும் நிலைமை தீவிரம் அடைந்தால் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் மற்றும் பிராந்திய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

தீவிர வலதுசாரி தலைவரான பொல்சொனாரோ மற்றும் அவரது அமைச்சர்கள் பலர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் பிரேசிலியாவில் சமூக இடைவெளியை மீறி கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். வைரஸை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை அளவுக்கு அதிகமாகச் சென்றுவிட்டதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் அரை மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு அதில் சுமார் பாதி அளவானது பிரேசிலில் பதிவாகியுள்ளது. இது குறைந்த வசதிகள் உள்ள பிராந்தியத்தில் இந்த வைரஸ் தாக்கத்தை செலுத்தும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

ஈக்குவடோரில் உள்ள அமேஸான் பழங்குடி மக்களில் ஒருவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது அந்தச் சமூகத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அந்நாட்டுத் தொண்டூழியர்கள் கூறியுள்ளனர்.

கொவிட்-19 நோய்த் தொற்றால் ஈக்குவடோர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாதமாக அது முடக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சுமார் 33,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றின் உண்மையான சம்பவங்களின் எண்ணிக்கையை மறைப்பதாக நிக்கரகுவா அரசு மீது உரிமைப் குழுக்கள் குற்றம்சாட்டியுள்ளன.

சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நோயாளர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக நிகரகுவா மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் உறவினர்களின் அனுமதியின்றி அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆபிரிக்காவில் தொற்றுச் சம்பவங்கள் வேகமாக அதிகரிப்பதை கணக்கெடுப்புகள் காட்டுகின்றன.

தென் ஆபிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 1,160 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகின. கடந்த மார்ச் மாதம் அங்கு முதல் நோய்த் தொற்று சம்பவம் பதிவானது தொடக்கம் ஒருநாளில் பதிவான அதிக சம்பவங்களாக இது உள்ளது. இதன்மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் கூடிய எண்ணிக்கையாக தென் ஆபிரிக்காவில் 15,515 வைரஸ் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்சபட்சமாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் முடக்க நிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.8 மில்லியனாக அதிகரித்திருப்பதோடு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக நீடித்து வரும் அமெரிக்காவில் 1.5 மில்லியன் பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 90 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆசியாவில் சில நாடுகள் சமூக முடக்கத்தை தளர்த்த தொடங்கியுள்ள நிலையில், அந்த நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன.

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள வியட்நாம், அத்தியாவசியமற்ற தொழில்களான மதுபான கூடங்கள், திரையரங்குகள் மற்றும் ஸ்பாக்களை திறந்துள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில், பியர் கார்னர் என அழைக்கப்படும் டா ஹேய்ன் வீதி வழக்கம் போல காட்சியளித்தது.

தாய்லாந்து இந்த மாத தொடக்கத்தில் சந்தைகளை திறந்த நிலையில், கடந்த வாரம் வணிக வளாகங்களையும் திறந்துள்ளது.

மியான்மரின் ரங்கூன் நகரிலும், பாகிஸ்தானின் கராச்சி நகரிலும் உள்ள வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இரு நாடுகளிலும் தொற்று அதிகரித்தபோதிலும், இறப்பு வீதம் குறைவாகவே உள்ளது என்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

 

Tue, 05/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை