பாதுகாப்பு உடைகள், முகக் கவசங்களை இலங்கையில் தயாரிக்க தீர்மானம்

ஜனாதிபதி செயலணி - யுனிசெப் விசேட பேச்சுவார்த்தை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளாவிய ரீதியில் தேவைப்படும் பாதுகாப்பு உடைகள் உற்பத்திகளுக்கு நிலவும் கேள்விகளுக்கு நிகராக இலங்கையில் அவற்றை உற்பத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப் பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கிடையில் நேற்று முன்தினம்  அலரிமாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் மேற்படி பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் வதிவிட பிரதிநிதி முராட் மொஹிதீன், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் ஹெனா சிங்கர் மற்றும் ஆடை உற்பத்தித்துறையின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது டென்மார்க் கோபன் ஹேகன் நகர் மற்றும் நேபாளத்தின் காத்மண்டு நகரிலிருந்தும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விசேட தொழில்நுட்ப செய்மதி ஊடாக இணைந்திருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக யுனிசெப் நிறுவனத்திற்கு வாரம் ஒன்றுக்கு தேவைப்படும் ஒரு மில்லியன் கையுறைகள் மற்றும் 10மில்லியன் முகக் கவசங்கள் தொடர்பில் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதனை இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் பாதுகாப்பு உடைகள் உற்பத்திக்காக ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இணைப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டு சபையின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழு தினமும் கூடி எதிர்கொள்ள நேரும் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மூலம் இப் பாதுகாப்பு உடைகளை கொள்வனவு செய்தல் மற்றும் அந்த உற்பத்திகளின் தரம் தொடர்பில் சான்றிதழ் வழங்குதல் தொடர்பான செயற்திட்டமொன்றை ஏற்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப் பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 04/17/2020 - 11:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை