உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்துங்கள்

பேராயர் மக்களிடம் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல்களில் மரணமடைந்தவர்கள், அங்கவீனர்கள் மற்றும் காயமடைந்தோர் நினைவாக வீடுகளில் இருந்தவாறே மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலிகளில் ஈடுபடுமாறு கத்தோலிக்க மற்றும் பௌத்த மதத் தலைவர்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேற்படி பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்கள் நினைவாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அவையனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மதத்தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை;

உயிர்த்த தாக்குதல் நடத்தப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை 21ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவை அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேற்படி தாக்குதலில் மரணமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் நினைவாக நாளை காலை 8. 40 மணிக்கு கத்தோலிக்க ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டு அதனையடுத்து வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொள்ளு மாறும் பேராயர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மல்வத்து பீடத்தின் சங்கைக்குரிய தேரர் பகமுனே சுமங்கல தேரர்; பௌத்த மக்கள் என்ற வகையில் அனைவரும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி  உயிர்த்த திருப்பலி பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் ஆலயம் மற்றும் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்திலும் ஒரே சமயத்தில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து கொழும்பிலும் கொழும்பை அண்டியுள்ள பிரதேசங்களிலும்

அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கானோர் இந்த தாக்குதல்களில் பலியாகியுள்ளதுடன் மேலும் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் காயங்களுக்கு உள்ளாகியுமுள்ளனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/20/2020 - 11:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை