அடக்கம் செய்வதா, எரிப்பதா; நிபுணர்களுடன் ஆராய்ந்து இறுதி முடிவை எடுங்கள்

கொவிட்-19 தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் ஒருவரது சடலத்தின் இறுதிக் கிரியை முன்னெடுப்பது தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழுவுடன் தீர ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவுக்கு தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸுடன் கூடிய சடலத்தை நல்லடக்கம் செய்வதா? அல்லது எரிப்பதா? என்பது தொடர்பில் உங்களது அலுவலக அதிகாரிகள் அதனுடன் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரிகள், சட்ட மற்றும் மண் பகுத்தாய்வாளர்கள், வைரஸ் பற்றிய ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்க்கமானதொரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் இது பற்றிய இறுதி முடிவு உங்கள் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பாளர் நாயகம் டொக்டர். அனில் ஜாசிங்கவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டிருப்பதாவது,

கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஒருவரின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் எமக்கு பல்வேறுபட்ட கருத்துக்கள் கிடைத்த வண்ணமுள்ளன. தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய நல்லடக்கம் மற்றும் எரித்தல் ஆகிய இரண்டு முறைகளுக்கூடாகவும் இறுதிக் கிரியைகளை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அதேபோன்று உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள ஒழுங்கு விதிமுறைகளிலும் மேற்படி இரண்டு முறைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கான இறுதி முடிவை நீங்களே எடுக்க வேண்டும்.

உங்கள் அலுவலகத்தின் அதிகாரிகளை இதனுடன் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரிகள், சட்ட மற்றும் மண் பகுத்தாய்வாளர்கள், வைரஸ் பற்றிய ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்க்கமானதொரு முடிவுக்கு வாருங்கள். எவ்வாறாயினும் இதைப்பற்றிய இறுதி முடிவு உங்கள் தீர்மானத்திற்கமையவே இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதிபட வலியுறுத்துகின்றோம்.

Sat, 04/04/2020 - 14:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை