பாராளுமன்றத்தை மீளக் கூட்டும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது

சுமந்திரனின் கருத்துக்கள் குறுகிய அரசியல் நோக்கம்  கொண்டவை

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டுவதற்கான  எந்த தேவையும் ஜனாதிபதிக்கு கிடையாது. அவசரகாலச்  சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டிருந்தால் மட்டும் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை மிள கூட்டலாமென முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து  கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டக்கோரும் யோசனை குறித்து கேட்டபோதே முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தினகரன் வாரமஞ்சரிக்கு தெளிவாக குறிப்பிட்டார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய ஒரு ஆட்சி அதன் பதவி காலத்தில் நான்கரை வருடங்கள் பூர்த்தி செய்தால் அந்த பாராளுமன்றத்தை ஜனாதிபதிக்கு கலைக்கும் அதிகாரமுள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இப்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கிடையாது. சபாநாயகர் கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது. எதுவுமே இல்லாத ஒரு பாராளுமன்றத்தை எந்த அடிப்படையில் மீளக்கூட்ட கொருகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

அப்படி உள்ளபோதும் நாட்டில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்குமானால் நிலைமைகளை ஆராயும் பொருட்டு ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தைக் கூட்ட முடியும். அதற்கான தேவை இன்று காணப்படவில்லை. இன்றைய நிலையில் சட்டச் சிக்கல் இருப்பதாகக் கூறுகின்றனர். அப்படியொரு எந்த சட்டச் சிக்கலும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை.

அடுத்தது இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை அரசியல் சார்ந்ததல்ல. உலகளாவிய தொற்று முழு நாட்டையும் ஆட்கொண்டுள்ளது. இந்த பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்ட கோருவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதிக்கு அடுத்த மூன்று மாத காலத்துக்கு அதிகாரமுள்ளது. இதில் பிரச்சினை கிடையாது. கொரோனா 19 தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தேர்தலை நடத்துவது எளிதான பணியல்ல. தொற்று முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தி ஜனாதிபதியுடன் இசைந்து போகக் கூடிய ஒரு அரசாங்கத்தை அமைக்க நாம் விரும்புகின்றோம். மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர். கடந்த காலத்தில் போன்று ஜனாதிபதி ஒரு அணியிலும் பாராளுமன்றம் வேறு அணியிலும் இருப்பது ஆரோக்கியமானதல்ல. அதன் காரணமாக அரசியல் நெருக்கடிகள் தான் அதிகரிக்கும் என்பதை காண முடிந்தது. மற்றொரு தடவை அவ்வாறு நடக்கக்கூடாது. நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு பெரும்பான்மை பலம் கொண்டதொரு ஆட்சி ஏற்பட வேண்டும்.

எம் ஏ எம் நிலாம்

Mon, 04/27/2020 - 07:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை