'INNOTEC 2020' தேசிய கண்காட்சி இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பம்

300 ஏக்கர் வளாகத்தில் காட்சிக் கூடங்கள்  

'INNOTEC 2020' தொழில்நுட்பவியல் மற்றும் புத்தாக்க தேசிய கண்காட்சி இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஹோமாகம பன்னிபிட்டியவில் நடைபெறவுள்ளது.  

உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சானது கல்வியமைச்சு மற்றும் தொழில்நுட்ப, புத்தாக்க இராஜாங்க அமைச்சுக்களுடன் இணைந்து இத்தேசிய கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.  

மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலை, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடம், நெனோ டெக்னொலொஜிக்கான இலங்கை நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை, அளவையியல் திணைக்களம் ஆகிய ஐந்து வளாகங்களிலும் மேற்படி திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையில் இக்கண்காட்சி நடைபெறும்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 16 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடமொன்றை திறந்து வைக்கவுள்ளார். இதனையொட்டியே இம்மாபெரும் கண்காட்சியை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.  

இலங்கையில் தற்போது 30 சதவீதமானவர்களே தொழில்நுட்வியலில் நாட்டம் கொண்டுள்ளனர். 2025 ஆகும்போது இதன் சதவீதத்தை 65 தொடக்கம் 70 சதவீதமாக அதிகரிப்பதே இக்காண்காட்சியை நடத்துவதற்கான பிரதான நோக்கமாகவுள்ளது. இக்கண்காட்சி முற்றிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படுகின்றது. இதில் 130 பாடசாலைகள், 15 பல்கலைக்கழகங்கள், 16 தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்குபற்றுகின்றன. பன்னிபிட்டியிலுள்ள ஐந்து வளாகங்களில் சுமார் 300 ஏக்கர் காணியில் இக்கண்காட்சி நடத்தப்படும். இங்கு அனைத்து செயற்பாடுகளும் பாடங்களாகவன்றி செயன்முறைகளாக முன்னெடுக்கப்படும். மாணவர்கள் இதில் பங்கெடுக்கலாம். அனுமதி இலவசம். அத்துடன் அனைத்து செயன்முறைகளிலும் மாணவர்கள் இலவசமாக பங்கெடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ட்ரோன் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், ரொபோக்களின் செயற்பாடுகள், நாய்கள் மற்றும் குதிரைகளின் சாகசங்கள் , முப்படைகளின் சாகசங்கள் மற்றும் சங்கீத இசை நிகழ்ச்சிகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

லக்ஷ்மி பரசுராமன்    

Wed, 03/04/2020 - 10:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை