கட்சி யாப்பைத் திருத்தினால் யானைச் சின்னம் கிடைக்கும்

ரணில் தலைமையில் ஆராய்வு 

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அமைப்பாளர்களுடன் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நீண்டநேரம் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது கட்சியின் சின்னமான யானையை எவருக்கும் தாரைவார்க்கக்கூடாது எனப் பெரும்பான்மையானோர் வலியுறுத்தியுள்ளனர்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பை திருத்தி அதனை ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டிணைத்த அணியாக மாற்றுவதன் மூலம் யானைச் சின்னத்தைப் பயன்படுத்த முடியுமென ஐ. தே. க வின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இது தொடர்பில் சட்ட வல்லுநர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு கட்சியின் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சி சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது. கட்சியிலிருந்து பலர் வெளியேறி தனியாக இயங்கியதை காணமுடிகிறது. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட இடமளிக்க முடியாதென பலரும் இங்கு சுட்டிக்காட்டினர்.  

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதைத் தவிர்ப்பதற்குரிய பேச்சுக்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கட்சியில் பலரும் எடுத்துக்கூறிய நிலையில், அதற்குக் கட்சித் தலைமையும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.  

நேற்றைய சந்திப்பின்போது யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியூடாகவே அது நடக்கவேண்டும். தொலைபேசி சின்னத்துக்கு ஐ. தே. க செயற்குழு அங்கீகாரம் வழங்கவில்லை. இதயம் சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. அன்னம் சின்னத்தைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி யானைச் சின்னத்தை ஐ. தே. க தாரைவார்க்க இடமளிக்க முடியாது எனக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.  

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் இருப்பதால், இவ்விடயம் தொடர்பில் இரு தரப்பும் கூடிப்பேசி இணக்கப்பாடொன்றை எட்டவேண்டியதன் அவசியமும் நேற்றைய சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.    

எம். ஏ. எம். நிலாம்   

Wed, 03/04/2020 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை