பொது இடங்களில் தொற்று நீக்கும் பணி

கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் நேற்று தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பொதுமக்களின் சனநடமாட்டம் அதிகமாகவுள்ள பிரதேசங்களை சுத்திகரிப்பதற்காக நேற்றைய தினத்தை அரசாங்க விடுமுறையாக பிரகடனம் செய்திருந்தது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமானநிலையம், அரச மற்றும் தனியார் பஸ் தரிப்பிடங்கள், பஸ்கள், ரயில் நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் திரையரங்குகளில் நேற்று தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இயந்திரங்களின் உதவியுடன் அனைத்து இடங்களிலும் நீர்கலந்த இரசாயனக் கலவைகள் விசிறப்பட்டன. அதிக வெளிநாட்டு பயணிகள் வந்திறங்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பெரும் எண்ணிக்கையானோர் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டு மூன்று தினங்களுக்கு இதுபோன்ற இரசாயனத் திரவியங்களை விசிறியடிப்பதன் மூலமே கொரோனா தொற்றை ஓரளவுக்காயினும் கட்டுப்படுத்த முடியுமென நம்புவதாக விமான நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் தொடர்ந்தும் தீவிர சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவதாக விமானசேவை நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார். உலக சுகாதார அமைப்பின் வலியுறுத்தல்களுக்கமைய விமானத்தின் சாப்பாட்டு மேசை, திரை உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மிகவும் நுட்பமான முறையில் சுத்திகரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரயில் மற்றும் பஸ்களின் ஆசனங்களும் நேற்றைய தினம் சுத்திகரிக்கப்பட்டன. பொதுமக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இயலுமானவரை சனநடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கைகளை எப்போதும் தூய்மையாக வைத்து கொள்ளுமாறும் கைகளால் முகம்,கண்,மூக்கு, வாயை தொடுவதை தவிர்க்குமாறும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுமாறும் வைத்தியர்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை