46 ஆவது தேசிய விளையாட்டு விழா; தேசிய நகர்வல ஓட்டம் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதல் தடவையாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கடந்த வருடத்தைப் போல இம்முறையும் தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் (15) காலை நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது.

எனினும், கடந்த மாதம் 15 ஆம் திகதி இப்போட்டித் தொடரை நடத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டாலும், சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பதற்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தற்போது இலங்கையிலும் அதிகரித்து வருகின்ற இத்தருணத்தில் 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்படி, கடந்த காலங்களைப் போன்று இம்முறை போட்டிகளில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கும் வகையில் திறந்த மட்டப் போட்டிகளாக நடைபெற்றது.

10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 34 நிமிடங்கள் 07.10 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

நகர்வல ஓட்டம், 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனான இவர், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்கு கொள்ளவில்லை.

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்ற ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எரந்த தென்னகோன், இம்முறை போட்டியை 34 நிமிடங்கள் 09.57 செக்கன்களில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் போட்டியை 34 நிமிடங்கள் 22.37 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்த சிவராஜன் தற்போது இலங்கை விமானப்படையில் பணிபுரிந்து வருகின்றார்.

உபாதை காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற பெரும்பாலான தேசிய மட்டப் போட்டிகளை தவறவிட்ட அவர், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் இலங்கை முப்படைகள் மெய்வல்லுனரில் 21 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில் முறையே 6 ஆவது இடங்களைப் பெற்றார்.

இந்த நிலையில், நெடுந்தூர ஓட்டப் போட்டியில் இலங்கையின் முன்னணி பயிற்சியாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சிவராஜன், 2014 ஆம் ஆண்டு முதல் தடவையாக தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் களமிறங்கி 5 ஆவது இடத்தையும். 2018 இல் 6 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய முத்துசாமி சிவராஜன், நுவரெலியா மாவட்டம் சாந்திபுர ஒலிபென்ட் தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இது இவ்வாறிருக்க, பெண்கள் பிரிவில் கடந்த 2 வருடங்களாக முதலிடத்தைப் பெற்று வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நிமேஷா நந்தசேனவை வீழ்த்தி தென் மாகாணத்தைச் சேர்ந்த கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கம் வென்றார். போட்டித் தூரத்தை 40 நிமிடமும் 16.80 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.

இதில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த கே.எம் மலிந்த்ரா போட்டியை 40 நிமிடமும் 21.04 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த லங்கா ஆரியதாச போட்டியை 40 நிமிடமும் 30.20 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இம்முறை தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்ட வீரர்களுக்கு முறையே 40 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாவும் பணப் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

நான்கு முதல், 10 ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு முறையே 20 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபா வரை பணப்பரிசில்களை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஐ.பி விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஏனைய போட்டிகள் ஜுன் மாதம் முதல் நடைபெறவுள்ளதுடன், இதன் இறுதி அங்கமான மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை