தினகரன் நாளிதழுக்கு இன்று பிறந்தநாள்

தினகரன் நாளிதழுக்கு இன்று 88ஆவது பிறந்தநாள். 87ஆண்டுகால சாதனைப் பயணத்தை பூர்த்தி செய்து 88ஆவது ஆண்டில் தடம்பதிக்கிறது தினகரன்.

1932ஆம் ஆண்டு இதே மாதம் 15ஆம் திகதிதான் (15.03.1932) தினகரன் ஆரம்பிக்கப்பட்டது. டி.ஆர். விஜயவர்த்தன என்ற சிங்களப் பெருமகனால் தமிழ்ப்பேசும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை இது.

வாசகர்களின் பேராதரவுடன் இதழியல் துறையில் எட்டுத் தசாப்தங்களுக்கும் மேலாக சாதனை புரிந்து வரும் தினகரன், நவீன தொழில்நுட்ப மாற்றங்களுடன் தன்னையும் இணைத்து தொடர்ந்தும் களத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

ஈழத்து புத்திலக்கிய படைப்புக்களுக்கு தினகரன் எப்போதும் முன்னோடியாகவே இருந்திருக்கிறது. ஆரம்பகால ஆசிரியர்களான மயில்வாகனம் இராமநாதன், வி.கே.பி. நாதன் போன்றோர் தமிழ் பேசும் மக்களை மையமாகக் கொண்ட படைப்பிலக்கியத்தையும் செய்திகளையும் வழங்கியிருக்கிறார்கள்.

1932இல் தினகரன் ஆரம்பிக்கப்பட்டாலும் 1959ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலமே பொற்காலமென ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் கைலாசபதி என்ற பேரறிஞர் தினகரனின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டது இந்த ஆண்டில்தான். 

பேராசிரியர் கைலாசபதி ஈழத்து எழுத்தாளர்களுக்கு தினகரனில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தபோது அது அச்சு ஊடகத்துறையில், அப்போது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. 1959ஆம் ஆண்டுகாலப்பபகுதியில் பிரசுரமான ஆயிரக்கணக்கான படைப்புக்கள் இன்றும் கருத்தாழச் சுவையோடு படிக்கக் கூடியதாக இருக்கின்றன.

கல்விமான் கைலாசபதியின் ஊடகத்துறை பிரவேசம் தினகரனில் மாத்திரமல்ல, ஈழத்தின் ஏனைய பத்திரிகைகளின் போக்கிலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னுமொரு விடயத்தையும் நாம் சொல்லியே ஆகவேண்டும். பண்டிதத் தமிழ் புழக்கத்தில் இருந்த காலத்தில், அதனை மாற்றி பழகு தமிழாக வளர்த்தெடுத்த பெருமை தினகரனுக்குத்தான் இருக்கிறது. கைலாசபதியின் வருகையோடு பழகு தமிழும் பழக்கத்துக்கு வந்த தென்பதே உண்மை. 

88ஆவது ஆண்டில் கால் பதிக்கும் உங்கள் அபிமான தினகரன் வாசகர்களுக்காக புதிய மாற்றங்களுடனும் புதுமைத் தோற்றத்துடனும் வெளிவரவுள்ளது. 

நவீனத்துவத்துக்குள் கால் பதித்திருக்கும் உங்கள் தினகரன் கூட்டுழைப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ஜீவனோபாயத் தொழிலுக்கு அப்பால், சகல ஊடகத்தோழர்களும் ஆத்ம திருப்தியோடு அர்ப்பணித்துச் செயற்படுவது தரமான பத்திரிகையைப் படைப்பதற்குப் பக்கபலமாக இருக்கிறதென்பதை மனமகிழ்வோடு கூறிக்கொள்கிறோம்.

88ஆவது ஆண்டில் கால்பதிக்கும் நாம், இளம் ஊடகவியலாளர் குழுவோடு இப்போது களம் இறங்கியிருக்கிறோம்.

மாற்றங்கள் எவ்வாறிருப்பினும் தேசிய ஊடகமென்ற அடிப்படையிலிருந்து நெறிபிறழாது ஊடக தர்மத்தை நாம் பேணுவோம் என்பதை வாசகர்களுக்குப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

க. குணராசா,
பிரதம ஆசிரியர்
தினகரன்/தினகரன் வாரமஞ்சரி

Sun, 03/15/2020 - 14:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை