நீர்கொழும்பு ஹோட்டலில் மோதல்; ஊழியர் வெட்டிக் கொலை

6 சந்தேக நபர்கள் பொலிஸில் சரண்

சாப்பிடுவதற்கு வந்தவர்கள் மது அருந்த முயன்ற போது விபரீதம்

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட கைகலப்பில் ஊழியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினமிரவு 7.30அளவில் இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவருந்துவதற்காக வந்த எழுவர் கொண்ட குழு, உணவுக்குப் பதிவு செய்துவிட்டுத் தாங்கள் கொண்டு வந்த மதுபானப் போத்தலை எடுத்து வைத்து அருந்தத் தொடங்கியுள்ளனர். இதன்போது உணவக உரிமையாளரும் ஊழியர்களும் அதனைத் தடுத்தபோதே கைகலப்பு ஏற்படுட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் படுகாயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கலகத்துக்கு காரணமான ஒருவரை பொலிஸார் நேற்றுக் காலை கைது செய்திருந்த நிலையில், நேற்று நண்பகல் அளவில் மேலும் அறுவர் சட்டத்தரணியூடாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். முதலில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபரே, இந்த அறுவரையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் காரணமாக பெரியமுல்ல பிரதேசத்தில் நிலவி வந்த பதற்ற நிலை நேற்றுக் காலையளவில் தணிந்ததுடன் வீதியெங்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விமானப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், மக்கள் தொடர்ந்தும் பீதியில் இருப்பதையும் சில உணவகங்கள் மூடப்பட்டிருந்ததனையும் அவதானிக்ககூடியதாக இருந்தது.

தாக்குதல் சம்பவத்தில் கெக்கிராவை கணேவத்துர பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் அப்துல் அஸீஸ் (34) என்பவரே உயிரிழந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-

பெரியமுல்ல சந்தியிலுள்ள ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் (பௌர்ணமி தினத்தன்று) (09) இரவு 10 மணியளவில் ஆறு பேர் கொண்ட குழுவினர் 03 சாராய போத்தல்களுடன் வந்துள்ளனர். அவர்கள் ஹோட்டலுக்குள் வைத்து மது அருந்த முற்பட்டபோது ஹோட்டல் உரிமையாளர்களும் ஊழியர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்புக்குமிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறியது. அத்துடன் ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் தமது கையிலிருந்த கூரிய ஆயுதத்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.

இதன்போது கடை ஊழியர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால், கலகம் செய்தவர்கள் தாம் வந்த வாகனத்தையும் விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். அயலவர்கள் படுகாயமடைந்த நால்வரையும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தபோதும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர்களான மொஹமட் ஜிப்றி, மொஹமட் றிஸ்வான் மற்றும் மேலுமொரு ஊழியர் ஆகிய மூவருமே பலத்த வெட்டுக் காயங்களுடன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சந்தேக நபர்கள் பயணம் செய்த வேனை பொலிஸார் நேற்றுக் காலையளவில் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையிலேயே மேலும் அறுவர் சரணடைந்தனர். இச்சந்தேக நபர்கள் ஏழு பேரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன், நீர்கொழும்பு தினகரன் நிருபர்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை