74 கிலோ ஹெரோயின், 66 கிலோ 'ஐஸ்' மீட்பு

காலி கடலில் கடற்படை அதிரடி

கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு என்பன இணைந்து காலி கடற்பரப்பில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது பெருமளவு போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதலின் போது 74.66 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 65 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இதன் போது ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு சந்தேக நபர்கள் திக்வெல்ல, பெலியத்த, பிலியந்தல, தங்கல்ல மற்றும் கடுவெலையை சேர்ந்தவர்களாவர். 33, 40, 49, 50 மற்றும் 53 வயதினர் எனவும் இவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவர் எனவும் அறிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் அறுவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அதிக அளவு ஐஸ் போதைவஸ்து இதுவென சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். ஈரானின் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து இரண்டு உள்ளூர் மீன்பிடி படகுகளுக்கு இந்த பாரிய ஐஸ் போதைவஸ்து தொகை கையளிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த போதைவஸ்து கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்வது தொடர்பான பொலிஸ் போதைவஸ்து பணியகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த போதைவஸ்து கும்பலின் பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைவஸ்துகளின் பெறுமதி இலங்கை ரூபாவில் 1 பில்லியன் ரூபா என தெரிய வருகிறது. இலங்கைக்குள் விநியோகிக்கும் நோக்கத்திலேயே இந்த போதைவஸ்து தொகை கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர். இவ்வாறான போதைவஸ்துகளுக்கு நாட்டுக்குள் எவ்வாறான கேள்வி உள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

70 க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இலங்கை கடற்படையின் சமுதுர கப்பலும் இந்த போதைவஸ்து சுற்றிவளைப்பில் பங்குபற்றியது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை