அரசியல் நோக்கில் சில சக்திகள் முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்துகின்றன

உலமா சபையுடனான சந்திப்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முஸ்லிம்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. வெளிச்சக்திகளுடன் இணைந்தே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் சில தரப்பினர் அரசியல் நோக்கில் முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி வருவதாக வண. கர்தினால் ​ெமல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வண.கர்தினால் ​ெமல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் உலமா சபை தலைவர், செயலாளர் அடங்கலான முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு பொரளை பேராயர் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் மௌலவி உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாஸ ராஜபக்‌ஷ வழங்கிய சாட்சியம்,பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக வௌியிடப்பட்டது உட்பட முக்கிய விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டன.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கும் சகவாழ்விற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அளித்து வரும் பங்களிப்பிற்கு இதன் போது உலமா சபை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை தடுக்க எடுத்த நடவடிக்கைக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

உலமா சபை மேற்கொண்டு வரும் சேவைகளை பாராட்டியுள்ள கர்தினால், சில அரசியல்வாதிகள் அரசியல் லாபத்திற்காக ஏனைய சமூகங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது உகந்ததல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.இவை நாட்டின் இன ஐக்கியத்திற்கு உகந்ததல்ல என்றும் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற ஒரு வருடம் நெருங்கிய நிலையிலும் சில பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் வாழ்வது குறித்தும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாதிருப்பது பற்றியும் உலமா சபை உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமைாய வாழும் நிலையில் சுயலாபத்திற்காக சில தரப்பினர் செயற்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேசிய கட்சிகளுடன் இணைந்து செல்வது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலமா சபை திறந்து வைக்க உள்ள சமாதான மையம் குறித்தும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டதோடு இதில் பங்கேற்குமாறு கர்தினாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை மணிநேரம் சந்திப்பு நீடித்ததோடு மீண்டும் சந்தித்து பேசவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. (பா)

ஷம்ஸ் பாஹிம்

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை