நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் 20இல் தூக்குத் தண்டனை

டில்லி நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் நிர்பயா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை தூக்கிலிட புதுடில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையிலிருந்தன. ஆனால் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனு, நிலுவையில் இருந்ததால் தண்டனையை நிறைவேற்ற புதிடில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அதன்பின்னர் பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய திகதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த புதுடில்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றும்படி திகார் சிறை நிர்வாகத்துக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக தூக்கு தண்டனை திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை