600 கடல் மைல் தொலைவில் அதிரடி

500 கிலோ ஹெரோயின், ஐஸ் கடத்தல்கள் முறியடிப்பு

2 படகுகளுடன் 16 பேர் கைது

இலங்கையிலிருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் ஐந்து பாரிய போதைப்பொருள் கடத்தல்கள் முறியடிக்கப்பட்டன. கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலே இவை முறியடிக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது 500 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானோரில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நபர்களும் நேற்றுக் காலை (5) திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவலை தொடர்ந்தே கடற்படையினர் 'சமுத்ரா' மற்றும் 'சயுரலா' ஆகிய மீன்பிடி படகுகளை பயன்படுத்தி இக்கடத்தலை முறியடித்தனர்.

கடற்படை கொமாண்டர் வைஸ் எட்மிரல் பியல் த சில்வா இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கான செய்தியாளர் மாநாட்டை நேற்று நடத்தினார். இதன்போது கடந்த 25 நாட்களுக்குள் கடற்படையினர் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் போதைப்பொருள் கடத்தலை முறியடித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடத்தலை முறியடித்ததன் மூலம் 400 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கடலில் வைத்து பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையென்றும் கூறினார்.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை