100 ஆண்டுகளில் முதல் முறை அமெரிக்க உச்ச நீதிமன்றம் மூடல்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் 100 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றம் கூறும்போது, “கொவிட்–19 காய்ச்சல் பரவி வருவதை அடுத்து வழக்கு விசாரணைகளை நீதிமன்றம் தள்ளி வைக்கிறது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 1 வரை இது அமுலில் இருக்கும்.

பொது சுகாதாரம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

1918இல் உலகளாவிய அளவில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ப்ளுா காய்ச்சல் காரணமாக பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து 102 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது மூடப்படுகிறது.

எனினும் வழக்கமான அலுவல் வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாக நடைபெறும் நீதிபதிகள் ஆலோசனைக் கூட்டம் தொலைபேசி வழியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளின் சராசரி வயது 67 ஆகும். இதில் இரண்டு நீதிபதிகள் 80 வயதுக்கும் மேற்பட்டோராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை