பாராளுமன்றம் கலைப்பு திகதி நாளை அறிவிப்பு

18 முதல் 20 வரை இறுதி அமர்வு

எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்த நாள் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அரசாங்க பேச்சாளரும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் நான்கரை வருட காலத்தின் பின்னர் அதனை ஜனாதிபதியினால் கலைக்க முடியும்.

எனவே அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தினகரனுக்கு தெரிவித்தார். எவ்வாறெனினும், பாராளுமன்றம் கலைக்கப்படும் சரியான திகதி நாளை (18) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டிலேயே அறிவிக்கப்படுமென்றும் அதற்கான இறுதித் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லையென்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதே வேளை இறுதி பாராளுமன்ற் அமர்வு நாளை முதல் 20 ஆம் தகதி வரை இடம்பெற உள்ளது.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு தீவிர போக்குடைய அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் உதவியின்றி தனித்துப் போட்டியிட்டே பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாடொன்றின்போது குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்று அரச தரப்புகள் கூறுகின்றன. புதிதாக தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்ப அடிப்படை வேலைகளை அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி அதில் தனது கையெழுத்தை வைத்தால் போதுமானது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

பாராளுமன்ற கலைப்புக்கு முன் எதிர்வரும் பெப்ரவரி 18 முதல் 20 ஆம் திகதி வரையிலான மூன்ற நாட்கள் பாராளுமன்றம் நடைபெறும்.அத்தினங்களில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்படும். அதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விவகாரம் தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படும்.இது தவிர குறைநிரப்பு பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது .

 

 

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை