மலையக மக்களுக்கு உதவிக்கரம்;ஜனாதிபதியும் பிரதமரும் தயார்

தொழிலாளர்களுக்கு பிரதிபலன்கள் கிடைக்க நடவடிக்கை

மலையக மக்களுக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து அதியுச்ச ஒத்துழைப்பை வழங்குவேன் என -பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை ஹற்றன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியதாவது,

"நான் சிறுவனாக இருக்கும்போது, மலையக மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக - வாழ்க்கை நிலை மேம்பாடு தொடர்பில் கதைக்கும்போது சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற நபர் தவிர்க்கமுடியாத இடத்தைப்பிடிப்பார். எனவே, செளமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் மலையக மக்கள் தொடர்பில் எனது தந்தையான அமரர் ரிச்சட் பத்திரணவின் மனதில் சிறந்த நன்மதிப்பு, கௌரவம் இருந்தது.

அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது இப்பகுதியிலுள்ள மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னால் முடிந்த நடவடிக்கைகளை அன்று முன்னெடுத்தார்.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருக்கும் நான் உங்களுக்கு (மலையக மக்களுக்கு) வழங்கவேண்டிய அனைத்துவித ஒத்துழைப்புகளையும் அமைச்சர் தொண்டமானுடன் இணைந்து வழங்குவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து இரவு - பகல் பாராது மலையக மக்களுக்காக அமைச்சர் தொண்டமான் தீவிரமாக செயற்பட்டுவருகிறார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்கள்

 

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை