ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச்

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய நோவக் ஜோகோவிச், இம்முறை சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், எட்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், நோவக் ஜோகோவிச், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேமை எதிர்கொண்டார்.

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஜோகோவிச் 6--4 என போராடி கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டெழுந்த டோமினிக் தியேம், செட்டை 6--4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய டோமினிக் தியேம், செட்டை 6--2 என எளிதாக கைப்பற்றினார்.

இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான நோவக் ஜோகோவிச், அடுத்த செட்டுகளில் அவதானமாகவும், ஆக்ரோஷமாகவும் விளையாட தொடங்கினார்.

நான்காவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நோவக் ஜோகோவிச், நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

இருவரும் தலா இரண்டு செட்டுகளை பகிர்ந்துக் கொண்டால், வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இதில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடினர்.எனினும் இறுதி தருணத்தில் தனது அனுபவத்தை கொண்டு சிறப்பாக விளையாடிய நோவக் ஜோகோவிச், செட்டை 6--4 என கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை வென்றார்.

நோவக் ஜோகோவிச்சுக்கு இது எட்டாவது அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும். இதற்கு முன்னதாக 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019ஆம் ஆண்டுகளில் அவர் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதுதவிர, நோவக் ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் எட்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டங்கள், ஒரு பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டம், ஐந்து விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன் பட்டங்கள், மூன்று அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டங்கள் அடங்கும்.

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை