பாதுகாப்பு மின் வேலிகளை உரிய முறையில் அமைத்துத் தர கோரிக்ைக

புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு உட்பட்ட எலுவங்குளம் ரால்மடு பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மின் வேலியை உரிய முறையில் அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ரால்மடு பகுதியில் 22,764 ஹெக்டேயர் நிலப்பரப்பு மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள வனப் பாதுகாப்பு திணைக்களத்தால் 'வீரகொடிச்சோலை ஒதுக்கப்பட்ட வனம்' ( Weerakocholai Forest Reserve) எனும் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் யானைகள் உள்ளே செல்ல முடியாத வகையில் இதனைச் சுற்றி யானைகள் வெளியேறாத வகையில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும், யானைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குறித்த பாதுகாப்பு மின் வேலி உரிய முறையில் அமைக்கப்படவில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் குறித்த மின் வேலியை சேதப்படுத்திவிட்டு யானைகள் வெளியே வருகை தருவதாகவும் மக்கள் ௯றுகின்றனர்.

குறித்த ரால்மடுவ பகுதியில் 140 ஏக்கருக்கும் அதிகளவில் விவசாய நிலங்கள் காணப்படுவதாகவும், வெளியே வரும் யானைகள் வெளியே குறித்த விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மழையை நம்பி நெல் விதைக்கும் தாங்கள், யானைகளின் அட்டகாசத்தால் தமது வயல் நிலங்களுக்கு காவலாளிகளை ௯லிக்கு அமர்த்தி பாதுகாப்பதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.அத்துடன், சூரிய சக்தி ( solar Power) மூலமே குறித்த மின் வேலிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதால், குறித்த மின் வேலிக் கம்பிகளில் அடிக்கடி மின்சாரமும் இருப்பதில்லை எனவும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அத்தோடு, குறித்த பாதுகாப்பு மின் வேலியானது ரால்மடு குளத்தின் அணைக்கட்டு பகுதியோடு இணைந்தால் போல் அமைக்கப்பட்டிருப்பதுடன், எவ்விதமான ஆலோசனைகளும் பெறப்படாமையே இந்த மின்சார பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே, இந்த பகுதியில் வாழும் மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை